தூத்துக்குடி: வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜயின் 68வது படமாக உருவாகியுள்ள 'கோட்' திரைப்படம் இன்று (செப்.5) நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக படம் வெற்றி பெற வேண்டும் அன்னதானம் வழங்குவது, பெண்களுக்கு டிக்கெட் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை விஜய் மக்கள் இயக்கத்தினர் மேற்கொண்டு வந்தனர். அந்த வகையில் தூத்துக்குடியில் உள்ள திரையரங்கம் ஒன்றில் நரிக்குறவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை அழைத்து வந்து படம் பார்க்க வைத்த விஜய் மக்கள் இயக்கத்தினர் செயல் பலரது மத்தியிலும் கவனம் பெற்றுள்ளது.
தூத்துக்குடி கிளியோபாட்ரா திரையரங்கிற்கு விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகி அஜிதா ஆக்னல் தலைமையில் வருகை புரிந்த 100க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஆட்டம், பாட்டம் எனக் கொண்டாடித் தீர்த்தனர். பின்னர் 20க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை நபர்களுக்கு இலவசமாக படத்திற்கான டிக்கெட் வழங்கி அவர்களுடன் இணைந்து படம் பார்த்தனர்.
இது குறித்து தூத்துக்குடி அஜிதா ஆக்னல் கூறுகையில்,"தூத்துக்குடி, விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கோர்ட் திரைப்படம் வெள்ளி விழா காண வாழ்த்துகிறோம். விஜய் எவ்வாறு நாளைய தீர்ப்பு மூலம் திரையுலக பயணத்தை ஆரம்பித்தாரோ அதே போல் இன்றைக்குத் தமிழகத்தில் தீர்ப்பை மாற்றி எழுத உள்ளார்.
மக்கள் இயக்கம் சார்பாக மாற்றுத்திறனாளிகள், நரிக்குறவர்கள் மக்களுக்கு பல்வேறு நன்மையான விஷயங்களைச் செய்துள்ளோம். அவர்கள் விஜயின் திரைப்படத்தைக் காண ஆர்வமாக உள்ளார்கள், எனவே அந்த ஆசையை பூர்த்தி செய்துள்ளோம்.
ரசிகர்களோடும் சேர்ந்து பார்ப்பதில் மிகுந்த சந்தோசம் அடைகின்றோம். கோட் திரைப்படமானது, தமிழ்நாட்டில் 9 மணி சிறப்புக் காட்சிகள் வெளியானது, ஆனால் மற்ற மாநிலங்களில் 5 மணி வெளியானது. அதே போல் தமிழகத்திலும் வெளியாகி இருந்தால் இன்னும் சிறப்பாகக் கொண்டாடி இருப்போம்.
இத்திரைப்படத்தைப் பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் அமர்ந்து பார்க்கக் கூடிய நல்ல படமாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம். விஜய் கூறியது போல் மாணவர்கள் அரசியலைப் பாடமாக எடுத்துப் படிக்க வேண்டும். மாணவர்கள் கற்பிக்கப்படும் போது நல்ல அரசியல் தலைவர்கள் உருவாவார்கள்.
போதைப் பொருள் சம்பந்தமான குறும்படம் எடுக்கப்பட வேண்டும். அதை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் திரையிடப்பட வேண்டும் அப்படித் திரையிடப்படும் போது போதைக்கான விழிப்புணர்வு பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் மத்தியில் சென்றடையும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விநாயகர் சிலையில் உருவான கோட் விஜய்.. ஓவிய ஆசிரியர் செல்வம் அசத்தல்!