திருச்சி: நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி 2012ஆம் ஆண்டு வெளியான 'நான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். நான் படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. நான் படத்திற்கு பிறகு சலீம், பிச்சைக்காரன், இந்தியா பாகிஸ்தான் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
விஜய் ஆண்டனி திரைப் பயணத்தில் மிக முக்கியமான படம் பிச்சைக்காரன். அதற்கடுத்து கொலை, ரத்தம், பிச்சைக்காரன் 2 போன்ற படங்களில் விஜய் ஆண்டனி நடித்தார். இந்த நிலையில் அடுத்ததாக விநாயக் வைத்தியநாதன் இயக்கி இருக்கும் ரோமியோ படத்தில் நடித்துள்ளார்.
ஏப்ரல் 11ஆம் தேதி வெளியாகும் இப்படத்தில் மிருனாளினி ரவி, யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு போன்ற பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் ரோமியோ படத்தைத் தயாரித்துள்ளது. பரத் தனசேகர் இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.
இந்த திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிகள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சியில் நடைபெற்ற விளம்பர நிகழ்ச்சியில் பேசிய விஜய் ஆண்டனி, "ரோமியோ திரைப்படம் திருமணத்திற்குப் பிறகு கணவன் மனைவி இடையே காதல் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த படம் விளக்குகிறது. காதல் என்பது அனைத்து வயதினருக்கும் ஒன்றுதான். அனைத்து மொழிகளில் வரும் படங்களும் தமிழ் சினிமாவில் வெற்றி பெறுவது வரவேற்புக்குரியது.
மொழிகளைத் தாண்டி படங்கள் வெற்றி அடைவது கலாச்சார வளர்ச்சி என நினைக்கிறேன். எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் தற்போது வரை இல்லை, அனைவரும் சேர்ந்து அரசியலுக்கு அழைத்தால் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். உயிரிழப்புகள் என்பது அனைத்து துறைகளிலும் இருக்கிறது, அனைவரும் உடல்நலத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து.
வருகின்ற மக்களவைத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும், 90 சதவீதம் அனைவரும் வாக்கு செலுத்த வேண்டும். நோட்டாவிற்கு வாக்களிக்கக் கூடாது என்பது என்னுடைய நிலைப்பாடு. "ஒர்ஸ்டில் பெஸ்ட்" என்று ஒன்று இருக்கும். அதற்கு வாக்களிக்க வேண்டும், ஒவ்வொரு தேர்தலுக்கும் வாக்கு சதவீதம் அதிகரித்து வருகிறது. கண்டிப்பாக நடிகர் சங்க கட்டிடத்திற்கு உதவுவேன்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: மறைந்த டேனியல் பாலாஜி உடலுக்கு ஆடுகளம் கிஷோர், கூல் சுரேஷ் உள்ளிட்டோர் அஞ்சலி! - Actor Daniel Balaji Death