சென்னை: தமிழ் சினிமாவில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான 'வருஷமெல்லாம் வசந்தம்' படத்தினை இயக்கி பிரபலமடைந்தவர் இயக்குநர் ரவி சங்கர். 63 வயதாகும் இவர், சென்னை கே.கே.நகரில் வசித்து வந்த நிலையில், நேற்று இரவு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவருடைய இறப்பு திரைத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வருஷமெல்லாம் வசந்தம் திரைப்படத்தினை இயக்கியதுடன் அப்படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து பாடல்களையும் இவரே எழுதியுள்ளார். மேலும், சூர்யவம்சம் திரைப்படத்தில் இடம்பெற்ற ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ எனும் பாடலின் வரிகளை இவர் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வந்த இவருக்கு காலில் நரம்பு சுற்று நோய் இருந்ததாக கூறப்படுகிறது. இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இயக்குநர் ரவிசங்கரின் நண்பரான கல்யாண் குமார், தனது முகநூல் பக்கத்தில், "காற்றில் கலந்த ரவிஷங்கர். ஒரு வார இதழ் ஆரம்பித்த புதிது. அதில் நான் அசோசியேட் எடிட்டர். தபாலில் வந்திருந்த சிறுகதைகளை தேர்வு செய்து கொண்டிருந்தேன். அதில் 'குதிரை' என்றொரு சிறுகதையின் எழுத்து நடை பிரமாதமாக இருந்தது. எழுதி இருந்தவர் சென்னையில் வசிக்கும்.
ரவிசங்கர் என்ற ஒரு இளைஞர். உடனே ஆசிரியர் பாக்யராஜிடம் கொடுத்து படிக்க வைத்தேன். படித்து முடித்தவர், கார் அனுப்பி அந்த இளைஞரை அழைத்து வரச் செய்தார். சிறுகதை பற்றி பாராட்டிவிட்டு, தன்னிடம் உதவியாளராகவும் சேர்த்துக் கொண்டார். இது நம்ம ஆளு உட்பட சில படங்கள் வேலை செய்துவிட்டு, இயக்குநர் விக்ரமன் படங்களில் பணிபுரிந்தார், ரவிஷங்கர்.
சூர்யவம்சம் படத்தில் இடம்பெற்ற 'ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ' என்ற பாடல் உட்பட சில பாடல்களையும் எழுதினார். பின்னர் இயக்குநராகி 'வருஷமெல்லாம் வசந்தம்' என்ற படத்தை இயக்கியதோடு, அதில் எல்லா பாடல்களையும் எழுதி இருந்தார். அதில் 'எங்கே அந்த வெண்ணிலா?' என்ற பாடல் உட்பட அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது.
திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையிலேயே வசித்தார். நண்பர்களின் தொடர்பையும் குறைத்துக் கொண்டார். நேற்று இரவு கே கே நகரில் உள்ள தன் அறையில் தற்கொலை செய்து கொண்டார் ரவிஷங்கர். தனிமையே அவரை கொன்றுவிட்டதாக கருதுகிறேன்.
ஒரு மிகப் பெரிய இயக்குநராக அல்லது பாடலாசிரியராக வலம் வருவார் என்று எதிர்பார்த்தேன். தமிழ் சினிமாவின் கண்ணாமூச்சி ஆட்டத்தில் தன்னை தொலைத்துக் கொண்டார். போய்வாருங்கள் ரவிஷங்கர்..வலியோடு உங்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். ஒரு ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ காற்றில் கரைந்து போனது" என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.