சென்னை: இயக்குநர் செல்வம் மாதப்பன் இயக்கத்தில், நடிகை யாஷிகா ஆனந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'படிக்காத பக்கங்கள்'. இந்தப் படத்தை எஸ் மூவி பார்க் மற்றும் பௌர்ணமி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இந்தப் படத்தில் ப்ரஜின் ஜார்ஜ் மரியன், பாலாஜி, லொள்ளு சபா மனோகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (ஏப்.27) சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் கவிஞர் வைரமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது மேடையில் பேசிய அவர், "இந்த விழாவிற்கு நான் மகிழ்ச்சியுடன் வந்துள்ளேன். வளரக்கூடிய கலைஞர்களை வாழ்த்த வேண்டும்.திரையரங்குகளில் 15 பேர் கூட வரவில்லை என்றால் காட்சிகள் ரத்து செய்யப்படுகிறது. இதற்குக் காரணம் யார்?
ஒரு மோசமான யுகத்தில் தமிழ் சினிமா இருக்கிறது. இந்தக் காலம் தொழில்நுட்பக் காலம். ரசிகர்களை பல பிரிவுகள் துண்டாடிவிட்டன. படங்கள் தோல்வி அடைந்தால் வருத்தப்படுவேன். நான் பாட்டு எழுதும் போது சமூகத்திற்கு ஏதாவது ஒரு நீதி, சீர்திருத்தம் கிட்டாதா என்று பயணித்துக் கொண்டு இருக்கிறேன்.
இது எனக்கு திரைத்துறையில் 44வது வருடம். இப்படத்தில் நான் எழுதிய சரக்கு பாடல் பிடிக்கும். எனது முன்னோடிகள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன் உள்ளிட்டோர் தமிழ்ப் பாடலின் வழியாக ஒரு கருத்தைச் சொல்ல நினைத்தனர்.
மதுவைக் கொண்டாடித்தான் தமிழில் பாடல்கள் வந்துள்ளது. இப்படத்தில் மதுக்கடையில் மதுவுக்கு எதிராக பாடல் வந்துள்ளது. இப்பாடல் முழுக்க முழுக்க மதுவுக்கு எதிரான பாட்டு. நாட்டில் மதுவால் அதிக விபத்துகள் நடப்பதாக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகில் நான் வெறுக்கும் வாசனை ஒன்று என்றால், புகை வாசனை. மதுவை விட மோசமானது புகை. பாட்டுக்குப் பெயர் வைத்தது மொழி. அதற்கு அழகு செய்தது இசை. நல்ல பொருளாக இருந்தால் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் தங்கம் தங்கம் தான். வைரம் வைரம் தான். நல்ல பொருள் எத்தனை காலம் ஆனாலும் தன் தடைகளைக் கிழித்துக்கொண்டு வெளி வந்துவிடும். கதை நன்றாக இருந்தால் நிச்சயம் அந்தப் படம் வெற்றி பெறும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: விடுதலை பாகம் 2-ல் சூரிக்கு காட்சிகள் குறைவா? குமரேசன் கூறிய முக்கிய அப்டேட்! - VIDUTHALAI PART 2 UPDATE