சென்னை: தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக பல ஆண்டுகள் வலம் வருபவர், கவிஞர் வைரமுத்து. திரையிசைப் பாடல்கள் தவிர்த்து கவிதைகள், நாவல்கள் என இலக்கிய உலகிலும் இருந்து விளங்குபவர். இதுவரை 35க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் ஏழாயிரத்து 500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு செயல்பாடுகள் குறித்த தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் காரணமாக, மனிதர்களுக்கான வேலை வாய்ப்பு குறைந்து கொண்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே, வரும் ஆண்டுகளில் வேலை வாய்ப்பு மிகக் குறைவாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில், இது குறித்து வைரமுத்து, கவிதை வடிவில் தமது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது;
“ஓர் எச்சரிக்கை
உலகம் இருபெரும்
துறைகளால் இயங்குகிறது
ஒன்று உற்பத்தித்துறை
இன்னொன்று சேவைத்துறை
சேவைத்துறையில் மனிதர்களை இடப்பெயர்ச்சி செய்யத்
தொடங்கிவிட்டன ரோபோக்கள்
சில ஆண்டுகளில்
முற்றிலும் பரவிவிடக்கூடும்
உற்பத்தித் துறையிலும்
ரோபோக்கள் ஆதிக்கம் பெற்றுவிடில்
உலகம் சந்திக்கப் போகும்
மிகப்பெரும் எதிர்விளைவு
வேலையில்லாத் திண்டாட்டம்
எண்ணூறு கோடி
மக்கள்தொகை கொண்ட உலகு
என்ன செய்யும்?
அறிவுலகம் ஆட்சி உலகம்
இரண்டும் சந்திக்க வேண்டிய
'காலப்பேரிடர்' இது” என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: "நான் தான் ஹீரோ என்றதும், ஹீரோயின்கள் வேண்டாம் என்றனர்" - புகழ்