சென்னை: தமிழ் சினிமா இந்த ஆண்டில் நல்லதொரு தொடக்கத்தை பெற்றுள்ளது எனலாம். அதாவது, பொங்கல் பண்டிகைக்கு சிவகார்த்திகேயனின் அயலான், தனுஷின் கேப்டன் மில்லர், அருண் விஜய் நடித்த மிஷன், விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின.
அனைத்து படங்களுமே குறிப்பிடத்தக்க வரவேற்பு மற்றும் வசூலைப் பெற்றது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகை முடிந்து இந்த வாரம் ஒரு சில படங்கள் வெளியாகியுள்ளன. ஆர்ஜே பாலாஜி மற்றும் அசோக் செல்வன் ஆகியோரின் திரைப்படம் உள்ளிட்ட ஒருசில சிறிய படங்களும் இந்த வார வெளியீடாக வந்துள்ளன. அதன்படி கோலிவுட்டில் இன்று 4 திரைப்படங்களும், நாளை 3 திரைப்படங்களும் திரைக்கு வருகிறது.
ஆர்ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன், அசோக் செல்வன் - சாந்தனு நடிப்பில் ப்ளூ ஸ்டார், முடக்கறுத்தான், தூக்குதுரை உள்ளிட்ட 4 படங்கள் இன்று (ஜன.25) வெளியாகியுள்ளது. அதாவது, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல், ஆர்.ஜே பாலாஜியுடன் இணைந்து சிங்கப்பூர் சலூன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். விஜய்யின் 68வது படத்தில் நடித்து வரும் மீனாட்சி சவுத்ரி இப்படத்தில் ஆர்.ஜே பாலாஜிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
மேலும், சத்யராஜ், லால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விவேக் - மெர்வின் இசையமைத்துள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நகைச்சுவை நடிகராக அறிமுகமான ஆர்.ஜே பாலாஜி, 'எல்கேஜி' என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக உருவெடுத்தார்.
குறைந்த அளவிலான படங்களில் மட்டும் ஹீரோவாக நடித்துள்ள ஆர்ஜே பாலாஜியின் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், நேற்று (ஜன.24) நடந்த சிறப்பு காட்சியில் கூட இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.
பா.ரஞ்சித் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார். முன்னதாக கோவிந்த் வசந்தா இசையில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ஹிட்டடித்துள்ள நிலையில், இன்று வெளியாகியுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
சமீபத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் ஜோடி முதன் முறையாக இப்படத்தில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் ட்ரிப் என்ற படத்தை இயக்கிய டென்னிஸ் மஞ்சுநாத் தற்போது 'தூக்குதுரை' என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் யோகி பாபு, இனியா, மகேஷ், சென்ட்ராயன், பாலசரவணன், அஸ்வின், சத்யா, மாரிமுத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படமும் இன்று வெளியாகியுள்ளது.
அதேபோல பிரபல சித்த மருத்துவர் வீரபாபு, முடக்கறுத்தான் என்ற படத்தை தயாரித்து, இயக்கி நடித்துள்ளார். இதில் பின்னணி இசையும் இவரே மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படமும் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், நாளை பிரபல நடன இயக்குனர் தினேஷ், யோகி பாபு இணைந்து நடித்துள்ள லோக்கல் சரக்கு, தானா, நியதி உள்ளிட்ட படங்கள் திரைக்கு வர உள்ளன.