சென்னை: தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை இந்தாண்டு தொடக்கம் முதல் பெரிய நடிகர்களின் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில், இம்மாதம் தொடக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் கலவையான விமர்சங்களைப் பெற்றாலும், இதுவரை 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இதன் மூலம் இந்த வருடம் 100 கோடி வசூலித்த முதல் தமிழ் படமாக அரண்மனை 4 இடம் பெற்றுள்ளது. மேலும், விஜய் நடித்த கில்லி ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களை திரையரங்குகளுக்கு வரவழைத்து 90ஸ் கிட்ஸ்களுக்கு நாஸ்டால்ஜியாவாக அமைந்தது.
மேலும், சந்தானத்தின் 'இங்க நான்தான் கிங்கு' படமும் குறிப்பிடத்தக்க வசூலை குவித்து வருகிறது. இந்நிலையில், இந்த வாரம் 5 நேரடி தமிழ் படங்கள் வெளியாகி உள்ளது. ஹிப் ஹாப் ஆதியின் பி.டி.சார், ராமராஜனின் சாமானியன், பகலறியான் உள்ளிட்ட படங்கள் வெளியாகியுள்ளது.
'பி.டி.சார்' நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா படத்திற்குப் பிறகு இயக்குநர் கார்த்திக் வேணுகோபால் இயக்கியுள்ள திரைப்படமாகும். இதில் ஹிப் ஹாப் ஆதி கதாநாயகனாக நடித்துள்ளார். காஷ்மீரா நாயகியாக நடிக்க, அனிகா சுரேந்தர், தேவதர்ஷினி, இளவரசு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தில் வில்லனாக தியாகராஜன் நடித்துள்ளார்.
பி.டி.சார் இசையமைப்பாளராக ஹிப் ஹாப் ஆதிக்கு 25வது படமாகும். சமுதாயத்தில் பெண்களுக்கு நிகழும் கொடுமைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 80களில் வசூல் மன்னனாக விளங்கிய ராமராஜனின் நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகியுள்ள படம் 'சாமானியன்'. இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தை ராகேஷ் இயக்கியுள்ளார். இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
8 தோட்டாக்கள் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்ற வெற்றி நடிப்பில் உருவாகியுள்ள படம் பகலறியான். ஒரே இரவில் நடக்கும் கதையாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை முருகன் இயக்கியுள்ளார். இப்படமும் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
மேலும் 6 கண்களும் ஒரே பார்வை, கொஞ்சம் பேசினால் என்ன, புரியோசா என்ற டப்பிங் படமும் இன்று வெளியாகியுள்ளது. மேலும், மம்முட்டி நடிப்பில் டர்போ (Turbo) என்ற படமும் இந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதையும் படிங்க: “சாமானியன் படத்தால் பலவற்றை இழந்தேன்..” - ராமராஜன் பட கதாசிரியர் பேச்சு! - Saamaniyan