சென்னை: இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என்று தற்போது பிஸியாக நடித்து வருகிறார். தமிழ் மொழி கடந்து தெலுங்கிலும் ஒரு ரவுண்ட் வந்துகொண்டு இருக்கிறார். இந்த நிலையில் கதையின் நாயகனாகவும் குறிப்பிடத்தக்கப் படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில், சமுத்திரக்கனி நடிக்கும் 'திரு.மாணிக்கம்' திரைப்படத்தின் பின்னணி இசைக் கோர்வை ஹைதராபாத்தில் தொடங்கியது. 'சீதா ராமாம்' படத்தின் மூலம் மொத்த இளைஞர்களையும் தன் இசையால் கவர்ந்த இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் தன் நவீன இசையால் எல்லாத் தரப்பினரையும் இந்தப் படத்தில் கவரவிருக்கிறார்.
பாடலாசிரியர்கள் சினேகன், ராஜூ முருகன், இளங்கோ கிருஷ்ணன் மற்றும் சொற்கோ ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். 'ராஷ்மி ராக்கெட்' என்ற இந்திப் படத்தின் கதை மூலம் மொத்த இந்தியாவையும் கவனம் ஈர்த்த இயக்குநர் நந்தா பெரியசாமி, இந்தப் படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார்.
இவர் தமிழில் ஒரு சில படங்களை இயக்கியுள்ளார். குறிப்பாக 'மாத்தியோசி', சமீபத்தில் சேரனின் நடிப்பில் வெளிவந்த 'ஆனந்தம் விளையாடும் வீடு' உள்ளிட்ட படங்கள் இயக்கியுள்ளார். கேரளாவைச் சேர்ந்த குமுளி, மூணாறு, மேகமலை, தேக்கடி, போன்ற எழில் கொஞ்சும் இயற்கையான பல இடங்களை இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் 'மைனா சுகுமார்' அள்ளிக் கொண்டு வந்து படம் பிடித்திருக்கிறார்.
ஒவ்வொரு மனிதனின் மனசாட்சியைக் கேள்வி கேட்கும் அற்புதமான படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தை GP ரவிக்குமார், சிந்தா கோபால கிருஷ்ண ரெட்டி மற்றும் ராஜா செந்தில் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் அடுத்தகட்ட தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, இப்படத்தின் பின்னணி இசைக் கோர்வை ஹைதராபாத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமுத்திரக்கனி இயக்கிய அப்பா, நிமிர்ந்து நில் போன்ற படங்களைப் போல இப்படத்திலும் ஒரு வலுவான கதை இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் 'குரங்கு பெடல்' ஃபர்ஸ்ட் லுக் டீசர் எப்படி இருக்கு?