சென்னை: உலகிலேயே முதல் முறையாகத் தணிக்கை சான்றிதழுடன் திரையரங்குகளில் முதல் பார்வை வெளியிடப்பட்டு, சாதனை படைத்த படம் 'டீன்ஸ்'. இயக்குநர் பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியுள்ள முற்றிலும் மாறுபட்ட, குழந்தைகளை மையமாகக் கொண்ட சாகச திரில்லரான இத்திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர், சென்னையில் நேற்று (ஏப்.06) வெளியிடப்பட்டது.
டிரெய்லரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்ட நிலையில், படத்தின் இசை சென்னை கமலா திரையரங்கில் நான்கு காட்சிகளாகத் தொடர்ந்து வெளியிடப்பட்டு, மீண்டும் ஒரு புதிய உலக சாதனையைப் படைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, ஒரே நாளில் ஒரே இடத்தில் அதிக இசை வெளியீட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட படம் என்பதற்கான சான்றிதழ் 'டீன்ஸ்' திரைப்படத்திற்கு உலக சாதனைகள் சங்கத்தால் வழங்கப்பட்டது.
பதிமூன்று குழந்தைகளை மையமாகக் கொண்ட கதை என்பதால், பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 13 இளம் வயதினருக்கு, நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 'டீன்ஸ்' படக்குழு நேரில் பாராட்டு தெரிவித்தது. இப்படத்தை கால்டுவெல் வேள்நம்பி, டாக்டர் பாலசுவாமிநாதன், டாக்டர் பின்ச்சி ஸ்ரீநிவாசன், ரஞ்சித் தண்டபாணி மற்றும் பார்த்திபன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
பயாஸ்கோப் டிரீம்ஸ் எல் எல் பி மற்றும் அகிரா ப்ரொடக்ஷன்ஸ் பேனரில் தயாராகியுள்ள இப்படத்திற்கு கிரியேட்டிவ் தயாரிப்பாளராக, கீர்த்தனா பார்த்திபன் அக்கினேனி பணியாற்றியுள்ளார். விரைவில் வெளியாக உள்ள 'டீன்ஸ்' திரைப்படத்தைத் தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் (கோயம்புத்தூர் தவிர) சக்திவேலனின் சக்தி பிலிம் பேக்டரி வெளியிட உள்ளது.
கோயம்புத்தூர் வெளியீட்டு உரிமையை எல்மா பிக்சர்ஸ் என்.எத்தில்ராஜ் பெற்றுள்ளார். இத்திரைப்படத்திற்காக இசை அமைப்பாளர் டி.இமான் மற்றும் ஒளிப்பதிவாளர் காவ்மிக் ஆரி ஆகியோருடன் முதல் முறையாகப் பார்த்திபன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விழாவில் பாராட்டு பெற்ற 13 இளம் சாதனையாளர்களின் சார்பாக இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரம் பேசுகையில், “எங்களை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்துக் கௌரவித்த பார்த்திபன் அவர்களுக்கு மிக்க நன்றி. 'டீன்ஸ்' திரைப்படம் பற்றி கூற வேண்டும் என்றால் இது பார்த்திபனின் கனவு. அவரும் இசையமைப்பாளர் டி.இமான் அவர்களும் முதல் முறையாக இணைந்துள்ளார்கள், பாடல்களைக் கேட்டேன், மிகவும் அருமையாக உள்ளன. உங்கள் அனைவரைப் போன்று நானும் இத்திரைப்படத்தைத் திரையரங்குகளில் காண ஆவலாக உள்ளேன்”, என்றார்.
அவரை தொடர்ந்து இசையமைப்பாளர் டி.இமான் பேசுகையில், “இப்படி ஒரு இசை வெளியீட்டு விழாவை இதுவரை நான் பார்த்ததில்லை, அதற்காகப் பார்த்திபனுக்கு நன்றி. இப்படத்தில் புதுமையான விஷயங்களை நிறைய முயற்சித்து உள்ளோம். முதலில் ஒன்று அல்லது இரண்டு பாடல்கள் போதும் என்று இருந்த நிலையில், தற்போது அது ஏழு பாடல்களாக வளர்ந்துள்ளது. பார்த்திபனும் நானும் எப்போதோ இணைந்து பணியாற்றி இருக்க வேண்டியது, அது இப்போதுதான் கைகூடி உள்ளது. அவருடன் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவம்”, என கூறியுள்ளார்.