சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்டுள்ள படம் 'அமரன்'. சாய் பல்லவி நாயகியாக நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படம் வெளியானது முதல் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. திரைப் பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பலர் இத்திரைப்படத்தை பாராட்டி வருகின்றனர்.
அமரன் திரைப்படம் உலக அளவில் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்கள் கழித்து ஓடிடியில் வெளியிட வேண்டும் என்று திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி இருந்தது. இந்நிலையில் அமரன் திரைப்பட ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் அமரன் படத்தின் ஓடிடி வெளியீட்டை தள்ளி வைக்க ரெட் ஜெயன்ட் மூவிஸ், ராஜ்கமல் ஃபிலிம்ஸ் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொது செயலாளர் ஆர் பன்னீர்செல்வம், "அமரன் திரைப்படம் அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் அதன் ஓடிடி வெளியீட்டை தள்ளி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மீண்டும் அஜித்துடன் மோதும் ரஜினி... 'கூலி' படத்தின் ரிலீஸ் தேதி என்ன?
மேலும், 'அமரன்' திரைப்படத்தின் வெற்றிக்கு ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயன்ட் மூவிஸ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட அனைத்து படக்குழுவினருக்கும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர் பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். நல்ல கருத்துள்ள திரைப்படம் ரசிகர்களை குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு வரவைக்கும் என்பதற்கு 'அமரன்' படத்தின் மாபெரும் வெற்றியே உதாரணம்” என்று கூறியுள்ளார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்