சென்னை: திரைத்துறையில் பல்வேறு திரைப்படங்கள் நீண்ட காலம் படப்பிடிப்பில் இருந்துள்ளது. காலநிலை மாற்றம், கலைஞர்கள் இடையே கருத்து வேறுபாடு, பட்ஜெட் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திரைப்படங்கள் படப்பிடிப்பிற்கு நீண்ட காலம் தேவைப்பட்டுள்ளது. அந்த வகையில் நீண்ட காலம் படப்பிடிப்பில் இருந்த தமிழ் மொழி மற்றும் தமிழில் டப் செய்யப்பட்ட படங்கள் குறித்து இந்த செய்தியில் காணலாம்.
உதயா: இயக்குநர் அழகம் பெருமாள் இயக்கத்தில் விஜய், சிம்ரன், விவேக் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் ‘உதயா’. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 1998ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் மார்ச் 2004ஆம் ஆண்டில் தான் படம் வெளியானது. பல்வேறு காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பில் பாதிப்பு ஏற்பட்டு 6 வருடங்களுக்கு பிறகு வெளியானது.
இப்படத்தின் இயக்குநர் அழகம் பெருமாள் இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். இயக்குநர் அழகம் பெருமாள் உதயா, டும் டும் டும், ஜூட் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். 'உதயா' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் இப்படம் வெளியாகி ஒரு மாதத்தில் ’கில்லி’ திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
விஸ்வரூபம் 2: கமல்ஹாசன் இயக்கி, நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் விஸ்வரூபம் (2013). இப்படம் பல்வேறு சர்ச்சைகளை கடந்து வெளியானது. இதனைத்தொடர்ந்து விஸ்வரூபம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு ஜூன் 2013ஆம் ஆண்டு தொடங்கியது. ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பணப் பிரச்சனை காரணமாக தாமதமானது. பின்னர் ஒரு வழியாக நவம்பர் 2017ஆம் ஆண்டு படப்பிடிப்பு முடிந்து, ஆகஸ்ட் 10, 2018இல் வெளியானது. ’விஸ்வரூபம் 2’ திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களை பெற்றது.
இந்தியன் 2: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996இல் வெளியான திரைப்படம் ‘இந்தியன்’. இத்திரைப்படம் கமல்ஹாசன் திரைவாழ்வில் மாபெரும் வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்தது. இதனைத்தொடர்ந்து இந்தியன் படத்தின் சீக்வல் எனப்படும் இரண்டாம் பாகம் இந்தியன் 2 கடந்த செப்டம்பர் 2017ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, 2019இல் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. பின்னர், கரோனா லாக்டவுன், தொழில்நுட்ப கலைஞர் உயிரிழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு தாமதமானது. பின்னர் ஒரு வழியாக கடந்த ஜூலை 12ஆம் தேதி வெளியானது. இந்தியன் 2 திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களை பெற்றது.
அயலான்: ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடித்த திரைப்படம் ‘அயலான்’. வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வருவதை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்ட அயலான் திரைப்படத்தில் கிராஃபிக்ஸ் காட்சிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். அயலான் திரைப்பட படப்பிடிப்பு கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், கடந்த 2024 பொங்கல் பண்டிகைக்கு வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அயலான் திரைப்பட இயக்குநர் ரவிக்குமார் முன்னதாக 'இன்று நேற்று நாளை' திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
துருவ நட்சத்திரம்: கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’. இப்படம் 2013ஆம் ஆண்டு சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2015இல் நடிகர் விக்ரமுக்கு கை மாறியது. பின்னர் பணப் பிரச்சனை, சட்ட ரீதியான சிக்கல் மற்றும் கரோனா தொற்று உள்ளிட்ட பல பிரச்சனைகளை கடந்து பிப்ரவரி மாதம் 2023இல் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இப்படத்தின் டீசர் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான நிலையில், இன்று வரை துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாகவில்லை.
ஆடுஜீவிதம் (The Goat life): இந்திய சினிமா வரலாற்றில் அதிக காலம் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்ற திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. கிட்டதட்ட 16 வருடம் புரொடக்ஷன் பணிகளில் இருந்துள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆடுஜீவிதம், பணப் பிரச்சனை காரணமாக கிடப்பில் போடப்பட்டது. பின்னர் புதிய தயாரிப்பாளரோடு கடந்த 2015ஆம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு 2018 வரை நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து கரோனா தொற்று காரணமாக மீண்டும் தடைபட்டு, 2022ஆம் ஆண்டு வரை படப்பிடிப்பு பணிகள் நடைபெற்றது. ஆடுஜீவிதம் திரைப்படம் இந்த ஆண்டு கடந்த மார்ச் 28ஆம் தேதி வெளியானது. இப்படத்தில் நடிகர் பிருத்விராஜ் நடிப்பு மற்றும் ஏ.ஆர்.ரகுமான் இசை பெரும் பாராட்டை பெற்றது.
இதையும் படிங்க: 'கெத்து தினேஷ்' முதல் 'லக்கி பாஸ்கர்' ஆண்டனி வரை... 2024ஆம் ஆண்டின் சிறந்த கதாபாத்திரங்கள்!
அவதார் (avatar: the way of water): பிரமாண்ட ஹாலிவுட் படமான அவதார் 2010ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, கிராஃபிக்ஸ் பணிகள் மட்டும் கிட்டதட்ட 7 வருடங்கள் நடைபெற்றது. பின்னர் படப்பிடிப்பு 2017இல் தொடங்கி 2020இல் முடிந்தது. முதல் பாகம் கடந்த டிசம்பர் 2022ஆம் ஆண்டு வெளியான நிலையில், வரும் 2025 டிசம்பரில் இரண்டாம் பாகம் ’avatar: fire and ash’ திரைப்படம் வெளியாகிறது. கிட்டதட்ட 16 ஆண்டுகள் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுள்ளது.