சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், புதிதாக படம் துவங்கவுள்ள தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஏற்கனவே படப்படிப்பில் உள்ள நிறுவனகள் தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் ஆலோசிக்க வேண்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "சங்க உறுப்பினர்கள் கவனத்திற்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் நலன் கருதி, திரைத்துறையில் தற்போது உள்ள சூழ்நிலையை மறு சீரமைப்பு செய்ய தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோர் அடங்கிய கூட்டமைப்பின் (Joint Action Committee) சார்பில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
அதன்படி, வருகிற ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்களுக்கான பூஜை மற்றும் படப்பிடிப்புகள் நடத்தவிருக்கும் நிறுவனங்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை கலந்தாலோசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், ஏற்கனவே படப்பிடிப்பில் உள்ள நிறுவனங்கள் தங்களது திரைப்படங்களின் படப்பிடிப்பு நாட்கள் பற்றிய விவரங்களை தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு கடிதம் மூலம் தெரிவித்து, தற்போது நடைபெறும் படப்பிடிப்புக்கான பரிந்துரை கடிதம் பெற்றுக்கொண்டு பணிகளை தொடர வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்" என தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி, வரும் காலங்களில் படம் எடுப்பவர்கள் நஷ்டமில்லாத சூழ்நிலையை உருவாக்கவும், நடிகர்கள், தொழிலாளர்கள், அனைவருக்கும் தொழில் பாதுகாப்பு வழங்கவும், திரைத்துறையை மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டி இருப்பதால் தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், சங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறாரா சிம்பு? மேலாளர் சொன்ன பிரத்யேக தகவல்!