திருச்சி: ரைஸ் ஈஸ்ட் எண்டர்மெயின்ட், ஸ்ரீவெங்கடேஷ்வரா சினி சார்பில், பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில் கவின் கதாநாயகனாகவும், பிரீத்தி முகுந்தன் கதாநாயகியாகவும் நடித்து சமீபத்தில் வெளிவந்துள்ள படம் 'ஸ்டார்'.
இயக்குநர் இளன் எழுதி இயக்கியுள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவுடன் சிறப்பாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், ஸ்டார் படத்தின் கதாநாயகியான நடிகை பிரீத்தி முகுந்தன் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்து தனது சினிமா அனுபவம் குறித்து பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், "இந்த ஸ்டார் படத்தை, நான் பிறந்து வளர்ந்த திருச்சியில் பார்க்க ஆசைப்பட்டு எனது குடும்பத்தோடு திருச்சியில் படம் பார்தேன். விளம்பர படத்தில் நடித்ததை தொடர்ந்து, இயக்குநர் இளன் மூலம் இந்த பட வாய்ப்பு கிடைத்தது.
பள்ளி படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் திருச்சியில் படித்தேன். திருச்சி என்ஐடியில் படித்து பொறியியல் பட்டம் பெற்றாலும் தொடர்ந்து நடிப்பதை விரும்புகிறேன். எனது முன்னேற்றத்திற்கு எனது பெற்றோர்கள் முக்கிய காரணம்.
மேலும், தமிழ்படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது. தற்போது, இயக்குநர் முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் விஷ்ணு மஞ்சு கதாநாயகனாக நடிக்கும் 'கண்ணப்பா' என்ற தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடபெற்று வருகிறது.
தமிழ் படங்களை பொறுத்தவரையில், நல்ல கதாபாதிரம் உள்ள கதையை பொறுமையாக தேர்ந்தெடுத்து நடிக்கலாம் என்று நினைத்துள்ளேன். மேலும், தமிழில் எனக்கு பிடித்த நடிகர் விஜய் சேதுபதி. அடுத்து அவரோடு நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை உள்ளது.
சிறு வயதில் நடிகர் விஜயையின் ரசிகையாக இருந்தேன். தற்போது, விஜய் சேதுபதியின் ரசிகையாக உள்ளேன். பெண்களுக்கு முக்கியம் தரும் கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பினாலும் இயக்குனர்கள் எதிர்பார்ப்பிற்கு நடிப்பேன்.
சினிமா பெரிய கடல், அதில் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. நடிகை திரிஷாவின் நடிப்பு மிகவும் பிடிக்கும். சிறு வயதில் பரத நாட்டியம் கற்றுக் கொண்டது சினிமாவுக்கு உதவிகரமாக உள்ளது. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கம் மிகவும் பிடிக்கும். எதிர்காலத்தில் சிறந்த கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கோலாகலமாக தொடங்கிய கேன்ஸ் திரைப்பட விழா! விழாவில் இடம் பெறும் இந்திய படங்கள் என்னென்ன?