சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள சங்க அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில் சங்கத்தின் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தை தொடர்ந்து, நடிகர் சங்கத் தலைவர் நாசர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "திரைப்படத் துறை மேலும் உயர்ந்த தளத்திற்கு கொண்டு சேர்ப்பது குறித்து ஆலோசனை செய்தோம். இந்த செயற்குழு கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்கம் குறித்து சில நல்ல முடிவுகள் எடுத்துள்ளோம். அதை அவர்களுடன் பகிர்ந்துகொள்ள உள்ளோம்" எனக் கூறினார்.
பின்னர், தயாரிப்பாளர் சங்கத்துடனான பிரச்சனைகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, "அதனை அவர்களிடம் தான் தெரிவிக்க முடியும் என்றும், பத்திரிக்கை மூலமாக தெரிவிப்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை" என்றும் நாசர் பதிலளித்தார்
சங்கத்தின் துணைத் தலைவர் பூச்சி முருகன் கூறுகையில், "பேச்சுவார்த்தை மூலம் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என தயாரிப்பாளர் சங்கம் எங்களுக்கு கடிதம் எழுதி உள்ளது. நாங்களும், தயாரிப்பாளர் சங்கமும் நட்புணர்வுடன் இருக்கிறோம். எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. அவர்கள் சில நடிகர்கள் மீது எங்களிடம் புகார் கொடுப்பதும், நாங்கள் அதற்கு பதில் கொடுப்பதும் வழக்கமாக நடைபெறும் ஒரு விஷயம் தான். எதுவாக இருந்தாலும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என நாங்கள் தயாரிப்பாளர் சங்கத்திடம் கோரிக்கை வைத்தோம்.
அவர்களும் அதனை ஆமோதித்து நேற்று எங்களுக்கு பேச்சுவார்த்தைக்கு கடிதம் கொடுத்துள்ளார்கள். பேச்சுவார்த்தை மூலம் எங்களுக்குள் இருக்கும் பிரச்னையை தீர்த்துக் கொள்வோம். இந்த வாரம் பேச்சுவார்த்தை நடைபெறும்" என்று தெரிவித்தார்.
மேலும், நடிகர்களின் சம்பளம் மற்றும் ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கு பிறகு புதிய பட பூஜை போடக்கூடாது என்பன உள்ளிட்ட தயாரிப்பாளர் சங்கம் விதித்துள்ள நிபந்தனைகள் குறித்து நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்வோம் என நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் துணைத் தலைவர் பூச்சி முருகன் தெரிவித்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: 'வாழை' படத்தின் நான்காவது சிங்கிள் வெளியானது...'பாதவத்தி' எப்படி இருக்கு?