சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர், நடிகர் அஜித்குமார். இவர் தற்போது இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஆரவ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
சமீபத்தில், படப்பிடிப்பு நேரத்தில் கார் விபத்தில் அஜித்குமார் சிக்கிய வீடியோ வெளியாகி ரசிகர்களை கவலையடையச் செய்தது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிந்து, இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், நடிகர் அஜித்குமார் தனது 63வது படமாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதன் அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இப்படத்திற்கு 'குட் பேட் அக்லி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனால் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படம் 2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்தது.
குட் பேட் அக்லி படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என ஏற்கனவே அறிவித்த நிலையில், படப்பிடிப்பு மே முதல் வாரத்தில் ஹைதராபாத்தில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களின் விவரம் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர்கள் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கடந்தாண்டு மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், இறுதியாக நடிகர் அஜித்குமார், இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரீ ரிலீஸ் படங்களால் சிறிய பட்ஜெட் படங்களுக்கு பாதிப்பா? கேபிள் சங்கர் பிரத்யேக பேட்டி! - Re Release Flims