காசா: இஸ்ரேல் படைகளால் ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டார். அவர் உயிரிழக்கும் முன்பு இஸ்ரேல் படையினர் அவரை சூழ்ந்திருப்பது போன்ற வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
காசாவில் உள்ள ரஃபா பகுதியில் உள்ள சுரங்கத்தில் ஹமாஸ் இயக்கத்தின் முக்கியத்தலைவர்களில் ஒருவரான யாஹ்யா சின்வார் வசித்து வந்தார். இவர் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது நடைபெற்ற தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர் என்று இஸ்ரேல் குற்றம்சாட்டி இருந்தது.
இந்த நிலையில் இவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அவரது இறுதி நிமிடங்களையும் வீடியோவாக எடுத்து இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. சோபா ஒன்றில் அமர்ந்திருக்கும் சின்வார் படுகாயம் அடைந்த நிலையில் காணப்படுகிறார். மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்லாமியர்கள் தலையில் அணியும் குஃபிய்யே என்ற தலை கவசத்தை சின்வார் அணிந்திருந்தார். இஸ்ரேல் படைகள் சூழ்ந்திருந்தபோதிலும் இஸ்ரேலுக்கு எதிராக முழக்கமிட்டபடியே இருந்தார்.
இது குறித்து பேசிய இஸ்ரேல் பாதுகாப்புப்படை செய்தி தொடர்பாளர் அட்மிரல் டேனியல் ஹகாரி,"சின்வாருடனான துப்பாக்கி சண்டையில் அவர் படுகாயம் அடைந்தார். குறிப்பாக அவரது கையில் காயம் ஏற்பட்டது. கடைசி தருணத்திலும் ஒரு கட்டையை எடுத்து இஸ்ரேல் ட்ரோன் மீது வீசினார். அவர் பதுங்கியிருந்த பகுதியில் ஒரு துப்பாக்கியும், 40,000 இஸ்ரேல் நாட்டு பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் கடைசி தருணத்தில் தப்பிக்க முயன்றார். அவரை இஸ்ரேல் படைகள் சுட்டுக்கொன்றன,"என்றார்.
இதையும் படிங்க : 2023 அக்டோபர் 7 தாக்குதல் முதலாம் ஆண்டு.. பெருமை கொள்ளும் ஹமாஸ், உஷார் நிலையில் இஸ்ரேல்
இஸ்ரேல் படையினரிடம் பிடிபடும் முன்பு பிணைகைதிகளை சுட்டுகொல்லும்படி சின்வர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி ஹமாஸ் படையினர் தங்கள் வசம் இருந்த 6 பிணை கைதிகளைக் கொன்றுள்ளனர். அவர்களது உடல்களையும் இஸ்ரேல் படையினர் மீட்டுள்ளனர். சின்வார் கொல்லப்பட்டது ஹமாஸ் இயக்கத்துக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. கடந்த மாதம் ஜூலை மாதம் ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தலைவர் கொல்லப்பட்ட பின்னர் அந்த இயக்கத்தின் தலைவராக சின்வார் நியமிக்கப்பட்டிருந்தார்.
இது குறித்து பேசிய லண்டனை சேர்ந்த சாதம் ஹவுஸ் சிந்தனைக் குழுவின் சர்வதேச பாதுகாப்பு திட்டத்தின் ஆராய்ச்சியாளர் நோமி பார்-யாக்கோவ், "சின்வார் கொல்லப்பட்டது உண்மையில் இஸ்ரேலின் மிகச்சிறப்பான நடவடிக்கை. இனி ஹமாஸ் இயக்கத்துடன் இஸ்ரேல் எளிதாக ஒப்பந்தம் மேற்கொள்ள முடியும்," என்றார்.
பரஸ்பரம் இருதரப்பிலும் உள்ள பிணைய கைதிகளை பரிமாறிக் கொண்டு போர் நிறுத்தம் செய்வது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தீர்மானிக்க வேண்டும் என்று சர்வதச வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.
காசாவில் இருந்து இஸ்ரேலால் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் சின்வார் கொல்லப்பட்டதை வரவேற்கின்றனர். இதன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.அதே நேரத்தில் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்