சென்னை: கோழிப்பண்ணை செல்லதுரை படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் யோகி பாபு, விஜய் சேதுபதி, பிரிகிடா மற்றும் இயக்குநர் சீனு ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், இயக்குநர் சீனு ராமசாமி பேசுகையில், “சினிமாவின் வளர்ச்சிக்கு முக்கியமான தேவை என்ன என்று சிந்தித்து கொண்டே இருப்பேன்.
ஒரு சினிமா, தியேட்டருக்கு வந்த பின், வசூல் செய்த பிறகு காணாமல் போய் விடுகிறது. அப்போ சினிமா என்பது வணிகம் தானா என்ற கேள்வி இருந்து கொண்டே இருந்தது. அதனை மாற்றி மனதில் இருக்க வைக்க வேண்டும் என்றால் நிலம், மக்கள் என்று எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். சினிமா ஒரு மாற்றத்தை சந்திக்க வேண்டும் என்றால் திரையரங்கில் இடைவேளை (interval) விடக்கூடாது. அதற்காக திரையரங்க உரிமையாளர்கள் யாரும் கோவப்பட வேண்டாம். பாப்கார்ன் வாங்குவோர் நிச்சயம் வாங்கிதான் செல்வார்கள்,” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் இணையத் தொடருக்கு (web series) வரவேற்பு இல்லை. மேற்கத்திய நாடுகளில் இணையத் தொடருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. நமக்கு பொறுமை இல்லை, 2 எபிசோட் பார்த்து விட்டு செல்கிறோம். மற்ற இடங்களில் அப்படி இல்லை, சினிமாவை ரசிக்கிறார்கள். சினிமா என்பது உடல், அது முழுமையாக தான் இருக்க வேண்டும். அதை கோழிப்பண்ணை செல்லதுரை கண்டிப்பாக கொடுக்கும்,” என்று பேசினார்.
இதையும் படிங்க: தி கோட்: படத்தில் அப்பாவைப் பார்த்துக் கொண்டே இருந்தேன்... விஜய பிரபாகரன் உருக்கம்!
“படப்பிடிப்பு தளத்தில் யாரையும் நான் பதட்டமாக வைத்திருக்க மாட்டேன். கயிற்றை ஆட்டிக்கொண்டு இருந்தால் பறவைகள் வந்து அமராது. அதனால் தான் நான் படப்பிடிப்புத் தளத்தை அமைதியாக வைத்து இருப்பதாகவும், ஒரு தந்தை தயாரிப்பாளர் என்பதற்காக இந்த படத்தை நான் எடுக்கவில்லை எனவும், ஏகன் ஒரு சினிமாக் காதலன் என்று எனக்குத் தெரிந்தது. அதனால் அவருக்கு ஆடிஷன் வைக்கவில்லை,” என்று கூறினார்.
மேலும், நான் நடிப்பை கற்றுக் கொடுக்கும் வாத்தியார் இல்லை; நான் நடிப்பை வாங்குபவன். நான் யாரையும் அறிமுகப்படுத்தவில்லை என்றார். வாழ்க்கை என்னை கைவிட்டுவிட்டது, நான் தோற்றுப் போய்விட்டேன், எனக்கு யாருமே இல்லை என்று நினைத்தால் இந்தப் படத்தில் உங்களுக்கு ஒரு செய்தி உள்ளது. இந்தப் பிரபஞ்சம் எந்த ஒரு தனி மனிதனையும் கை விடுவது இல்லை. ஏதோ ஒரு வகையில் வந்து உங்களை அரவணைக்கும் என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஏகனுக்கு சர்வதேச விருதுகளும் காத்துக் கொண்டிருக்கிறது என்று பாராட்டினார். பின் யோகி பாபு இந்த படத்தின் கதையை கேட்கவே இல்லை என்றார். இப்போது இருக்கிற காலகட்டங்களில் வீட்டில் பெண்களைத் திட்ட முடியாது. இப்போது திட்டினால் வீட்டில் இருந்து கிளம்பி விடுவார்கள். காரணம் பேருந்து இலவசம். ஆனால், ஆண்கள் ஏறினால் காசு கேட்கிறார்கள். பெண்கள் இப்போது தங்கள் நினைக்கும் இடத்திற்கு செல்ல முடிகிறது. இதற்குக் காரணம் முதல்வர் ஸ்டாலின் தான்.
தமிழ்நாட்டில் ஆண்கள் அடிமையாக இருக்க முதலமைச்சர் ஸ்டாலின் தான் காரணம். அரசு மருத்துவமனையை நாங்கள் கொண்டாடி இருக்கிறோம். அரசு மருத்துவர்களைக் கொண்டாடி இருக்கிறோம். வாழ்வியல் படங்கள் எடுக்கும் எங்களின் சவாலே வேறு. உள்ளூர் மக்களும் ரசிக்க வைக்க வேண்டும். வெளிநாடு ரசிகர்களையும் சென்றடைய வேண்டும். நிச்சயமாக கோழிப்பண்ணை செல்லதுரை உங்களை ஏமாற்றது என்று கூறினார்.