சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், கடந்த பிப்ரவரியில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்னும் கட்சியைத் தொடங்கினார். இதனையடுத்து, இக்கட்சியை பதிவு செய்யப்பட்ட கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக விஜய் தெரிவித்தார்.
மேலும், சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் பாடலை விஜய் சென்னையில் அறிமுகப்படுத்தினார். தவெக கட்சி பாடல் வெளியான போது பேசுபொருளானது. மேலும், தவெகவின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23ஆம் தேதி அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடத்துவதற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் அனுமதி கோரினார்.
இதற்கு விழுப்புரம் காவல்துறை சில நிபந்தனைகளுடன் அனுமதியும் அளித்தது. இருப்பினும், மாநாடு தேதியில் மாற்றம் ஏற்படுவதாக தகவல் வெளியானது. இதனையடுத்து வரும் அக்டோபர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் என்று விஜய் அறிவித்துள்ளார். தற்போது மாநாட்டிற்கான ஏற்பாடுகளை தவெகவினர் விறுவிறுப்பாக செய்து வருகின்றனர். மாநாட்டில் யார் யாரை எல்லாம் விஜய் அழைப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடித்துள்ள 'சார்' படத்தை பார்த்த பின் நாம் தமிழர் கட்சி ஒருங்கினைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சீமானிடம் தவெக மாநாட்டிற்கு விஜய் உங்களை அழைத்தாரா என்று கேட்டதற்கு, "மாநாடு குறித்து பேச்சு வரும் போது ஒரு அண்ணனாக நான் விஜய்யிடம் சொன்னது யாரையும் அழைக்கக் கூடாது, மாநாட்டில் தேவையில்லாதது வரும்.
இதையும் படிங்க: வேட்டையன் டிக்கெட் முன்பதிவு: சைலண்டாக சம்பவம் செய்யும் சூப்பர்ஸ்டார்! - Vettaiyan Advance booking
கட்சியை தொடங்கி தனது கொள்கை என்ன, லட்சியம் என்பதை பேசிவிட்டு வந்துவிட வேண்டும் என கூறினேன். அதுதான் கட்சியின் தொடக்கத்திற்கு நன்றாக இருக்கும். அதன் பிறகு அதிகாரத்திற்கு வந்த பிறகு மற்றவர்களை அழைத்து பேசவைப்பது வேறு. தொடங்கும் போது விஜய் தான் பேச வேண்டும், மற்ற கட்சியினரை பேச வைப்பது நன்றாக இருக்காது” என கூறியதாக தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்