திருச்சி : ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் அமரன். இத்திரைப்படத்தில் முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்துள்ளதாக பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருச்சியில், உள்ள பிரபல தனியார் திரையரங்கை எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில், சிறுபான்மை முஸ்லீம்கள் மீது வெறுப்பை விதைத்து கல்லாகட்டும், சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் அமரன் திரைப்படத்தை தடை செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தினர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து, திருச்சி எஸ்டிபிஐ கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் தமீம் அன்சாரி கூறுகையில்," நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் அமரன் திரைப்படம் முஸ்லீம்களின் மீது வெறுப்பை விதைக்கும் ஒரு கதைக்களத்தைக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதில், காஷ்மீரில் வாழும் முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்துள்ளது.
தேசிய சுதந்திரத்திற்காக முழங்கப்பட்ட விடுதலை முழக்கமான ஆசாதி கோஷம் என்ற முழக்கத்தை பயங்கரவாத முழக்கமாக இத்திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் மற்றும் பஜ்ரங்கல் போன்ற அமைப்புகள் பயன்படுத்தக்கூடிய 'ஜெய் பஜ்ரங்பலி' என்ற கோஷம் ராணுவத்தினர் பயன்படுத்தக்கூடிய கோஷமாக இத்திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : 'அமரன்' வெற்றியை ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய சிவகார்த்திகேயன்!
மேலும், வெறுப்பை விதைக்கும் விதமாக எடுக்கப்பட்டுள்ள திரைப்படத்தை தமிழக முதலமைச்சர் பாராட்டி உள்ளார். அதுமட்டுமின்றி ஜனநாயக சக்திகள் முதல்வரின் பாரட்டின் அறிவிப்புக்கு பிறகு அனைவரும் வாய் மூடி மெளனிகளாக அனைவரும் வரவேற்றுள்ளனர். மேலும், இத்திரைப்படத்தை பள்ளி, கல்லூரிகளில் போட்டுக்காட்ட வேண்டுமென்ற செயல் வன்மமான செயல். முஸ்லீம்களை மேலும், மேலும் ஒரு குற்றப்பரம்பரையாக காட்டக்கூடிய இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறது" என்றார்.
ராமநாதபுரத்திலும்: இதேபோல், ராமநாதபுரம் மாவட்டத்தில் அமரன் திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் அமரன் திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்கு முன்பு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில், முஸ்லீம்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு பத்திரம் வழங்கி அனைவரும் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று கூறியிருப்பது ஒட்டுமொத்த முஸ்லீம் சமுதாயத்தை அவமதிப்பதாக உள்ளது.
உடனடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமரன் திரைப்படம் குறித்து தெரிவித்த கருத்துக்களை திரும்ப பெற வேண்டும் என்றும், அமரன் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்