சென்னை: தன்ராஜ் கொரனானி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள திரைப்படம் 'ராமம் ராகவம்'. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் சமுத்திரக்கனி, இயக்குநர் பாலா, பாண்டியராஜன், சூரி, தம்பி ராமையா, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது மேடையில் நடிகர் சூரி பேசுகையில், “வெண்ணிலா கபடிக்குழு படத்தில் எனது புரோட்டா காமெடியை தெலுங்கில் செய்தவர் தன்ராஜ். ஒரு காமெடி நடிகர் இயக்குநராக மாறியுள்ளார். அப்பா பையன் எமோஷ்னலை சரியாக செய்துவிட்டால் அப்படம் தோற்காது. இப்படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று நம்புகிறேன். படம் எடுப்பது பெரிய விஷயமில்லை.
அதனை மக்களிடையே கொண்டு செல்வதுதான் மிகப்பெரிய கடினமாக உள்ளது. சமுத்திரக்கனி எனக்கு ஹீரோ மாதிரி. அவரது உடல்மொழியை நான் நிறைய படங்களில் பயன்படுத்தி உள்ளேன்” என்றார். பின்னர், சமுத்திரக்கனி பேசுகையில், “மிகவும் நெகிழ்வான தருணம். அப்பா பற்றி பேசும் போது தடுமாறுகிறது. ஒவ்வொரு அப்பாவும் சகாப்தம். பத்து படம் நடித்திருந்தாலும் இது வேறு கதை. புரிந்து கொள்ள முடியாத சொந்தம் அப்பா மகன் உறவு. இங்கு சரிசெய்யப்பட வேண்டியது அப்பாக்கள் தான்.
பாண்டியராஜன் இரண்டு ஆண்டுகளாக படம் பண்ணாதது எனக்கு கோபம். சூரியின் தற்போதைய நிலைபார்த்து சந்தோஷமாக இருக்கிறது. பாலா அவரது படத்தில் என்னைக் கூப்பிடுவதே இல்லை. இப்போது வணங்கான் படத்தில் நடித்துள்ளேன். அது ஒரு அழகான பயணமாக இருந்தது. அவரது அன்புக்கு எப்போதும் கட்டுப்பட்டவனாக இருப்பேன்.
சிறிய படங்கள் எடுப்பது போராட்டமாக உள்ளது. அப்பா படம் எடுத்தேன். இப்போது வரை என்ன கணக்கு என்று தெரியாது. அதன்பிறகு படம் எடுக்கவே தோன்றவில்லை. பேரன்போடு எடுக்கிறோம். ஆனால், எங்கு கொண்டு வைப்பது என்று தெரியவில்லை” என்றார். அதனைத் தொடர்ந்து இயக்குநர் பாலா பேசுகையில், “சமுத்திரக்கனியின் மாபெரும் ரசிகனாக நான் வந்திருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
நடிகனாக அவர் நிரூபித்து விட்டார். அவருடைய உழைப்பிற்கும் நான் ரசிகன்தான். கடுமையாக உழைக்கக்கூடியவர். மற்றவர்களுக்கு உதவக்கூடிய அவருடைய தன்மை எனக்கு வியப்பாக இருக்கும். உதவுவதில் அவருக்கு பெரிய மனசு இருக்கு” என்றார்.