சென்னை: சூப்பர் ஸ்டார் என உலகமெங்கும் உள்ள ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது திரைப்படம் வெளியீடு என்றாலே அவரது ரசிகர்களுக்கு ஒரு திருவிழாவை போன்றதாகத்தான் இருக்கும். அந்த வகையில் அவரது நடிப்பில், அவருடைய மகள் ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் உருவான 'லால் சலாம்' படம் இன்று (பிப்.9) வெளியாகியுள்ளது.
அதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல திரையரங்குகளில் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, ரஜினியின் திரைப்பட கொண்டாட்டத்திற்கே பெயர் போன திரையரங்கமான சென்னை ரோகிணி திரையரங்கத்தில், 'லால் சலாம்' படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளனர்.
அதற்காக, திரையரங்கம் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த உயரமான கட்அவுட்டிற்கு, சுமார் 3 லட்சம் ரூபாய் செலவில் பிரம்மாண்ட மாலை அலங்காரம் செய்து மகிழ்ந்தனர். இது குறித்த வீடியோவை ரோகிணி திரையரங்கம் தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தது. இதனிடையே, 'லால் சலாம்' படம் வெற்றி பெற வாழ்த்து கூறி நடிகர் ரஜினிகாந்த், அவரது ஐஸ்வர்யாவுடன் இருக்கும் புகைப்படத்தோடு பதிவிட்டிருந்தார்.
இதையும் படிங்க: KH 233 படம் கைவிடப்பட்டதா? விஜயை நெருங்குகிறாரா எச்.வினோத்? - வெளியான முக்கிய அப்டேட்!
அதில், "என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம். உங்களுடைய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" எனக் குறிப்பிட்டு இருந்தார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். குறிப்பாக, ரஜினி இப்படத்தில் மொய்தீன் பாய் என்கிற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும், இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், தம்பி ராமையா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். முன்னதாக, நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலடர்' படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை ஈட்டியது. அதனைத் தொடர்ந்து, 'ஜெய் பீம்' படத்தின் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கேரளா மற்றும் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அந்த படத்தில், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபஸில் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அமிதாப் பட்சன் ரஜினி இருவரும் 33 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, ரஜினியின் பிறந்தாள் தினத்தை முன்னிட்டு 'வேட்டையன்' படத்தின் டீஸர் வெளியாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.
இதையும் படிங்க: "நான் தான் ஹீரோ என்றதும், ஹீரோயின்கள் வேண்டாம் என்றனர்" - புகழ்