சென்னை: லால் சலாம் படத்தைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். தா.சே.ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும், லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் பெயரை சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் அன்று வெளியிட்டனர்.
வேட்டையன் என பெயரிடப்பட்டு உள்ள இந்தப் படத்தில் பகத் பாசில், அமிதாப் பச்சன், அர்ஜூன், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் இணைந்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மற்றும் கேரளாவின் திருவனந்தபுரம், மும்பை என பல்வேறு இடங்களில் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதனால். ஹைதராபாத் சென்ற நடிகர் ரஜினிகாந்த படப்பிடிப்பு முடிவடைந்ததையொட்டி. மீண்டும் சென்னை வந்தார். இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, லால் சலாம் படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கு, “மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பெருமளவில் வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. லைகா தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் இப்படக்குழு அனைவருக்கும் என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து வேட்டையன் படப்பிடிப்பு நிலை குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம், "வேட்டையன் படம் தற்போது 80 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது. இன்னும் 20 சதவிகித வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்றார். வேட்டையன் எப்போது திரைக்கு வரும் என்ற செய்தியாளரின் கேள்விக்கு, படப்பிடிப்பு விரைவில் முடியவுள்ள நிலையில், திரைக்கு வரும் தேதியை படக்குழுவினர் அறிவிப்பர் என்றார்.
வேட்டையனுக்குப் பிறகு ஏதேனும் படங்கள் உள்ளதா என்ற கேள்விக்கு, “லோகேஷ் கனகராஜுடன் இணைய உள்ளேன்" எனத் தெரிவித்தார். இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி - லோகேஷ் காம்போ தமிழ் சினிமாவில் பெரும் மைல்கல்லாக அமையும் என ரசிகர்கள் இப்போதே கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.
தொடர்ந்து சமீபத்தில் நடிகர் விஜய் கட்சி தொடங்கினார். அவரைத் தொடர்ந்து நடிகர் விஷாலும் தற்போது கட்சி தொடங்கியிருப்பது குறித்த கேள்விக்கு, அரசியல் கேள்விகளைத் தவிர்க்கலாம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். அரசியல் குறித்து நடிகர் ரஜினியின் பதில் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இதையும் படிங்க: அயலான், கேப்டன் மில்லர் படங்கள் ஓடிடியில் வெளியானது!