சென்னை: இயக்குநர் ஷாகித் ஆனந்த் இயக்கத்தில், பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகர் நடிப்பில், ஸ்டார்ட் அப் துறையின் பின்னணியில் உருவாகியிருக்கும் காமெடி டிராமா வெப் சீரிஸ் 'கோடியில் இருவர்'. இந்த வெப் சீரிஸை Do. Creative Labs தயாரித்துள்ளது. இந்த வெப் சீரிஸை பரிதாபங்கள் புரொடக்சன்ஸ் மற்றும் Scaler நிறுவனம் இணைந்து வழங்குகிறது.
இசையமைப்பாளர் ஆஃப்ரோ வெப் சீரிஸ் டைட்டில் பாடலுக்கு இசையமைத்துள்ளார். போரிஸ் கென்னத் மற்றும் ரோஹித் சுப்ரமணியன், டானில்லா கொரேயா, சாஹித் ஆனந்த் ஆகியோர் இணைந்து இந்த சீரிஸுக்கு கதை எழுதியுள்ளனர். போரிஸ் கென்னத் மற்றும் ரோஹித் சுப்ரமணியன் ஆகியோர் வசனம் எழுதியுள்ளனர்.
ஆனந்த் அகல்வாடி, போரிஸ் கென்னத், ரோஹித் சுப்ரமணியன், டான்னிலா கொரேயா, சாஹித் ஆனந்த் ஆகியோர் நிர்வாக தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர். இந்த வெப் சீரிஸ் வரும் பிப்ரவரி 25ஆம் தேதியான நாளை முதல் 5 நாட்களுக்கு ஒவ்வொரு எபிசோடாக பரிதாபங்கள் யூடியூப் சேனலில் ஒளிபரப்பாக உள்ளது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
முன்னதாக, கோடியில் இருவர் சீரிஸின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகர், தங்கள் களத்திலிருந்து மாறுபட்டு ஒரு கலக்கலான முழுமையான வெப் சீரிஸில் நடித்துள்ளனர். இந்த வெப் சீரிஸ் பரபரப்பான திரைக்கதையில், உயர்தர தொழில்நுட்ப அம்சங்களுடன், லைவ் லொகேஷன்களில் படமாக்கப்பட்டுள்ளது.
கிராமத்தில் வாழும் இரு இளைஞர்கள் கிராம வாழ்வின் பிரச்னைகளிலிருந்து தப்பிக்க பெங்களூரு பயணித்து, அங்கு ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனி ஆரம்பிக்க முனைகிறார்கள். அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள்தான் இந்த வெப் சீரிஸின் கதை.
ஐடி ஊழியர்கள், ஸ்டார்ட் அப் துவங்க ஆசைப்படும் இளைஞர்கள் என இன்றைய தலைமுறையினர் தங்கள் வாழ்வோடு எளிதில் தொடர்புபடுத்திக்கொள்ளும் வகையிலான திரைக்கதையுடன், நகைச்சுவை கலந்து, அனைவருக்கும் பிடிக்கும் வண்ணம், கலக்கலான சீரிஸாக இந்த வெப் சீரிஸ் உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: விஜயும் நானும் அரை மணிநேரம் பேசினோம் - இயக்குநர் எழில் சுவாரஸ்ய பதிவு!