சென்னை: ஆதிராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'நினைவெல்லாம் நீயடா'. இப்படம் இளையராஜா இசை அமைத்துள்ள 1,417வது படம். இதனை லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தின் பிரஜன், மனிஷா யாதவ், ரெட்டின் கிங்ஸ்லி, மனோபாலா, மதுமிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் இந்த படத்தின் மோஷன் போஸ்டரை, இயக்குநர் கௌதம் வாசுதேவன் மேனன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுப் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று(பிப்.06) சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் கே.ராஜன், ஆர்.வி.உதயகுமார், ப்ரஜன், கேயார், சிநேகன், பேரரசு, கோமல் சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து விழா மேடையில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசுகையில் “ பல ஹீரோக்களிடம் நன்றி என்பதே இல்லை. தன்னை வளர்த்துவிட்ட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களை மறந்து விடுகின்றனர். நடிகர் விஜய் புதிதாக அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். தமிழ் சினிமா சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விஜய் வெற்றி பெற வேண்டும் ஆனால் எம்ஜிஆர் செய்ததில் 20சதவீதம் தொண்டு செய்திட வேண்டும்.
புஸ்ஸி ஆனந்தை அறிக்கை விடச் சொல்வது நல்லதல்ல,களத்தில் இறங்கி வேலை செய்திடவேண்டும். உங்களுக்கு எதிராக திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் உள்ளது. அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் உள்ளிட்டோர் குறித்து நன்றாகப் படியுங்கள் மிகப் பெரிய தலைவராக வரலாம். இதுவரைக்கும் பல நல்ல திட்டங்களைச் செய்துள்ளனர் என்றார்.
இதனைத் தொடர்ந்து இயக்குநர் பேரரசு பேசும் போது ”தமிழகத்தில் உள்ள அனைத்து தலைவர்களும் நல்லவர்கள் என்று ராஜன் சொல்வது சரியல்ல. நான் எப்போதும் நடிகர் விஜய்யின் விசுவாசி. அவர் பெரிய தலைவராக வர வேண்டும். இது இளையராஜாவின் 1417வது படம். இந்த சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது.
அவர் இசையமைத்த ஒவ்வொரு பாடல்களும் பொக்கிஷம். நமக்கு துக்கம் ஏற்படும் போது இளையராஜா பாடல் கேட்டு ஆறுதல் அடைவோம். ஆனால் இன்று இளையராஜாவுக்கு மிகப் பெரிய துக்கம் நடந்துள்ளது அவருக்கு யார் ஆறுதல் செல்வார்கள். இப்படத்தின் ட்ரெய்லர் பார்க்கும் போது கே.ராஜன், உதயகுமார் உள்ளிட்டோருக்கு அவர்களது முதல் காதல் நினைவுக்கு வந்துவிட்டதை நான் பார்த்தேன் என்று நகைச்சுவையாகப் பேசினார்.
இதையும் படிங்க: சட்லஜ் நதியில் கவிழ்ந்த கார்.. சைதை துரைசாமி மகன் மாயம்; தகவல் கொடுத்தால் ரூ.1 கோடி சன்மானம் அறிவிப்பு!