சென்னை: ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்து வரும் படம் அமரன். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் வீர மரணம் அடைந்தார்.
மூன்று தீவிரவாதிகளைக் கொன்றுவிட்டு தன் இன்னுயிரை இழந்தவருக்கு அசோக சக்கரம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவரது வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டு வரும் படம் தான் அமரன். இப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம், சோனி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது.
இதன் டைட்டில் டீஸர் சிவகார்த்திகேயன் பிறந்தநாளை ஒட்டி சமீபத்தில் வெளியானது. இப்படத்திற்கு ஏன் அமரன் என்று தலைப்பு வைக்கப்பட்டது என்று அதன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில், “இப்படத்தின் திரைக்கதைக்கு நான் முதல் முதலில் எழுதிய வார்த்தை அமரன். அதற்கு அறியாதவன், போர்வீரன், தெய்வீகமானவர் என்று பொருள்.
இந்த தலைப்பை எங்களுக்குத் தரச் சம்மதம் தெரிவித்த இயக்குநர் கே.ராஜேஷ்வருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெருமிதமாக உள்ளது. இந்த தலைப்பைப் பெற்றுக் கொடுத்த கௌதம் கார்த்திக் மற்றும் கார்த்திக் இருவருக்கும் நன்றி” என்று பதிவிட்டிருந்தார்.
நவரச நாயகனின் அமரன்: இந்த நிலையில் இதே பெயரில் கடந்த 1992ம் ஆண்டு நவரச நாயகன் கார்த்தி நடிப்பில் ஒரு படம் வெளியானது. இப்படத்தை ராஜேஸ்வர் இயக்கி இருந்தார். இப்படம் கார்த்திக்கு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தது. அதில் வெத்தல போட்ட சோக்குல என்ற பாடலை கார்த்தி பாடியிருந்தார். வித்தியாசமான படமாக அது அமைந்தது. காட்பாதர் ஸ்டைல் மேக்கிங், வித்தியாசமான ஒளிப்பதிவு ஆகியவற்றால் படம் கார்த்திக் ரசிகர்களைக் கவர்ந்தது.
காதல் மன்னனாக வலம் வந்து கொண்டு இருந்த கார்த்திக்கை கேங்ஸ்டராக திரையில் பார்த்த ரசிகர்கள் கொண்டாடினர். ஆதித்யன் இசையில் கார்த்திக் பாடிய வெத்தலை போட்ட சோக்குல, சந்திரனே சூரியனே உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. குறிப்பாக வெத்தல போட்ட சோக்குல பாடலில் கார்த்திக்கின் வித்தியாசமான குரலும் சில்க் ஸ்மிதாவின் நடனமும் தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்று.
மேலும் கடந்த சில வருடங்களுக்கு முன் அமரன் படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கப்பட்டது. கார்த்திக் நடிப்பில் இயக்குநர் ராஜேஷ்வரே இப்படத்தையும் இயக்க இருந்தார். வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடக்கும் என்று சொல்லப்பட்ட நிலையில் இன்று அவரை இது குறித்து எந்தவித அறிவிப்பும் வெளிவரவில்லை. தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு அமரன் என்று பெயரிடப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே வெளியான படத்தின் தலைப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பது ஆறாவது முறையாகும். எதிர் நீச்சல், காக்கி சட்டை, ஹீரோ, வேலைக்காரன், மாவீரன் உள்ளிட்ட படங்கள் இதற்கு முன் வெளிவந்த படங்களின் தலைப்பாகும். தற்போது நவரச நாயகன் கார்த்திக் நடித்து மிகவும் பிரபலமான அமரன் படத்தின் தலைப்பில் நடிக்கிறார்.
இதையும் படிங்க: "யாரிடமும் போனில் பேசக் கூட பயமாக இருக்கிறது" - இயக்குநர் பேரரசு..