சென்னை: எம்.சினிமா புரொடக்சன்ஸ் தயாரித்து, இயக்குநர் சாஜி சலீம் இயக்கத்தில் நடிகர் விதார்த் நடிக்கும் படம் லாந்தர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை வடபழனி கமலா திரையரங்கில் இன்று (ஜூன் 13) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் விதார்த், எம்.எஸ்.பாஸ்கர், இயக்குநர் செல்லா அய்யாவு, சரவணன், தயாரிப்பாளர் தேனப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் நடிகர் விதார்த் பேசுகையில், “லாந்தர் கதை கேட்டதும் ரொம்ப பிடித்திருந்தது. போலீஸ் கதாபாத்திரம் என்றதும் மூன்று மாத காலம் கேட்டேன். இல்லை நீங்கள் சாதாரணமாக வந்தால் போதும் என்று இயக்குநர் சொன்னார். ஏவிஎம் மாதிரி எத்தனையோ புரொடக்சன்ஸ்-ல் வேலை செய்து இருக்கிறேன். ஆனால், பத்ரி மாதிரி தயாரிப்பாளரை பார்த்தது இல்லை. இந்த தயாரிப்பாளர் ஜெயித்தால் 50, 100 படங்களை பண்ணுவார்” என்றார்.
அதனைத் தொடர்ந்து நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பேசுகையில், “திறமைகள் எங்கே வேண்டுமானாலும் இருக்கலாம். அது எப்போது வேண்டுமானாலும் வெளிப்படலாம். அந்த காலத்தில் இருக்கும் பாடல்கள் 50, 60 ஆண்டுகளைக் கடந்தும் நம் மனதில் நிற்கிறது. படம் உங்களுக்குப் பிடித்தால் மற்றவர்களிடம் சொல்லுங்கள். பிடிக்காவிட்டால் உங்களுக்குள் வைத்துக் கொள்ளுங்கள், எல்லோரும் பார்க்கட்டும்” என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “பெரிய நடிகர்களின் படங்களில் நான் நடிக்க மாட்டேன் என்று சொல்லவில்லை, நான் நடிக்க தயார். ஆனால், சிங்கத்துக்கு வாலாக இருப்பதை விட ஈக்கு தலையாக இருப்பதே மேல்” என்று சிறிய படங்களில் நல்ல கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்தும் பகிர்ந்து கொண்டார்.
பின்னர், நடிகர் சங்க நிர்வாகியும், வீட்டுவசதி வாரிய தலைவருமான பூச்சி முருகன் பேசுகையில், “தற்போது எனக்கு வேலை இருப்பதால் சினிமா நிகழ்ச்சிக்கு அவ்வளவாக வருவதில்லை. ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு வராமல் போயிருந்தால் வருத்தப்பட்டிருப்பேன். இந்த கதை க்ரைம் த்ரில்லர்.
நேற்று படம் பார்க்கும் போது, லாந்தர் என்று எதற்காக பெயர் வைத்தீர்கள் என்று கேட்டேன். அந்த பெயரிலே வெற்றி இருக்கிறது. சிறிய படங்களுக்கு அதிகமாக வாய்ப்பு அளிக்க வேண்டும். சிறிய படங்களில் நல்ல கதை இருக்கிறது. மினி பட்ஜெட் படங்கள் சிறப்பாக இருக்கிறது. மைனா நான் விரும்பி பார்த்த படம்” என்றார்.
தயாரிப்பாளர் தேனப்பன் பேசுகையில், “விதார்த்தை நம்பி படம் பார்க்கலாம். அவர் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். ஹீரோயினைப் பார்த்தால் சினேகா மாதிரி இருக்கிறது என்றும், கடைசி மேடையில் பேசியதை சிலர் எதிர்த்தார்கள். சினிமாவில் எல்லோருக்கும் கருத்து சொல்ல உரிமை இருக்கிறது” என்றும் கூறினார்.