சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் தமிழ் சினிமாவில் வில்லன், ஹீரோ, இயக்குநர் என பன்முகத் தன்மை கொண்டவர். சமீபத்தில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான லியோ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். முன்னதாக, நடிகர் மன்சூர் அலிகான் ’இந்திய ஜனநாயக புலிகள் மக்கள் கட்சி' என்ற கட்சியை ஆரம்பித்தார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ள அவர், அதற்கான வேலைகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில், இந்திய ஜனநாயக புலிகள் மக்கள் கட்சியின் முதல் மாநாடு, கடந்த பிப்.24 அன்று சென்னை பல்லாவரத்தில் நடைபெற்றது. அதில், வாக்கு இயந்திரங்களை ஒழித்து வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும், போதைப்பொருள் தமிழ்நாட்டில் ஒழிக்கப்பட வேண்டும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அனைவருக்குமான சமூகநீதியை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த நிலையில் நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவருமான மன்சூர் அலிகான், வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இது குறித்து தனது அறிக்கையில், “மயிலம் மக்கள் மனம், மகிழம் பூவாய் மகிழ, செஞ்சி கோட்டையின் செம்மாந்தர்கள் கொடி பறக்க, செய்யாறு மக்களின் சோற்றில் நெய்யாறு ஓட, நான் சுசுவாசி அல்ல, பந்தாவாசி அல்ல, மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த வந்த-வாசி, அரசியல் பொதுநல, சந்நியாசி.
போளூர் மக்களின் புகழூர் தாய்மார்கள் வயிற்றில் பால் வார்த்திடும், பாலூர், ஆரணியே, அன்ண பட்சினியே, நினை, என் மனதின் ஆழ்நிலை சக்தியாய், தாயார், மகளாய் துதித்து, பணி செய்ய, ஆணையிடுவாய், தாழ்திறவாய், தரணி போற்றும், ஆரணியே” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: திமுக இருக்காது எனக் கூறிய பலர் காணாமல் போயுள்ளனர்.. பிரதமருக்கு கனிமொழி பதிலடி!