சென்னை: தமிழ் சினிமாவின் மாஸ் நடிகராகவும், கிளாஸ் நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் விக்ரம். சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இருந்தாலும் சமீபத்தில் வெளியான படங்கள் இவருக்கு வெற்றியைப் பெற்றுத் தரவில்லை.
பல ஆண்டுகளாகத் துருவ நட்சத்திரம் திரைப்படமும் வெளியாகாமல் ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் சித்தா படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் இயக்குநர் அருண் குமார். தற்போது இவரது இயக்கத்தில், நடிகர் விக்ரம் தனது 62வது படத்தை நடித்து வருகிறார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சீயான் 62 திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு இணைந்துள்ளதாக படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது. சுராஜ் வெஞ்சாரமூடு உள்ள போஸ்டர் ஒன்றை வெளியிட்டுப் படக்குழு அறிவித்துள்ளது. இதன்மூலம் தமிழ் சினிமாவில் கால் பதிக்கிறார் சுராஜ் வெஞ்சாரமூடு.
மலையாளத் திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான கேரள மாநில விருதை 3 முறை வென்றவர், 2016ஆம் ஆண்டில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றவர் என நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு பற்றிச் சொல்லிக் கொண்டே செல்லலாம். தற்போது இவர் 'சீயான் 62' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
மேலும் இவரின் நடிப்பில் வெளியான 'ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன்', 'டிரைவிங் லைசன்ஸ்', 'ஜன கன மன', 'த கிரேட் இந்தியன் கிச்சன்' ஆகிய படங்களிலும் இவரது தனித்துவமான நடிப்பு அனைத்துத் தரப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இவர் முதன்முறையாகத் தமிழில் 'சீயான் 62' படத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தை ஹெச்.ஆர் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
சீயான் விக்ரம் - எஸ்.ஜே.சூர்யா - சுராஜ் வெஞ்சாரமூடு எனத் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்த, விருது பெற்ற நட்சத்திரக் கலைஞர்களின் காம்போ, 'சீயான் 62' படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும், இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் தொடங்கவுள்ளதாகவும் படக் குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மும்பையில் நடந்த நடிகை வரலட்சுமியின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்!