சென்னை: இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், தமிழ் சினிமாவில் தனித்துவமான பாடல்கள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். அட்டகத்தி முதல் வடசென்னை, சார்பட்டா பரம்பரை, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என பல்வேறு படங்களில் இவரது பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் சந்தோஷ் நாராயணன் இசையில், தெருக்குரல் அறிவு வரிகளில், தீ (Dhee) மற்றும் அறிவு இணைந்து பாடிய 'என்ஜாய் என்ஜாமி' என்ற ஆல்பம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.
தற்போது வரை உலகம் முழுவதும் 40 கோடிக்கும் அதிகமானோர் இந்த ஆல்பத்தை கண்டு ரசித்துள்ளனர். இந்நிலையில், பாடல் வெளியாகி மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை அடுத்து, இது குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், “இது நாள் வரையில் இந்த பாடல் மூலம் ஒரு பைசா கூட வருமானம் கிடைக்கவில்லை. சம்பந்தப்பட்ட மியூசிக் லேபிளை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறோம். எனக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்தால், நான் எனது சொந்த ஸ்டுடியோவை துவங்கவுள்ளேன். தனி இசைக் கலைஞர்களுக்கு, வெளிப்படைத்தன்மையுடன் இயங்கும் தளங்கள் தேவை” என பேசியிருந்தார்.
மேலும், “இதில் கூடுதலாக எனது யூடியூப் சேனல் வருமானமும் அந்த மியூசிக் லேபிலுக்கு செல்கிறது. இதை பொதுத்தளத்தில் சொல்ல விரும்பினேன். தனி இசைக்கலைஞர்கள் கவலைப்பட வேண்டாம், உங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும்” என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார். இந்நிலையில், இது குறித்து அப்பாடலை தயாரித்த மாஜா நிறுவனம் தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சுயாதீன இசையை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டதே மாஜா நிறுவனம். எங்களின் முதல் வெளியீடான 'என்ஜாய் என்ஜாமி'யின் வெற்றி எமக்கும், இந்த பாடலுக்காக உழைத்த அனைவருக்கும் உலகளாவிய அங்கீகாரத்தை பெற்று தந்துள்ளதையிட்டு, இந்த சாதனையை படைத்தத்தற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். துரதிர்ஷ்டவசமாக இந்த பாடலின் வெற்றிக்குப் பின்னால் சம்பந்தப்பட்ட கலைஞர்களிடையே இருந்த சில முரண்பாடான கருத்துக்களால் இந்த வெற்றி பெரும் சர்ச்சைக்குள்ளானது.
எங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் சமீபத்திய தவறான குற்றச்சாட்டுகளை நாங்கள் கடுமையாக மறுக்கிறோம். சுயாதீன கலைஞர்களின் படைப்புகள் மற்றும் சுயாதீன இசைக்கான எங்கள் அர்ப்பணிப்புக்களில் நாங்கள் பொறுப்புடன் இருக்கிறோம், மேலும் நாங்கள் எங்கள் கடமைகளை சரியாக நிறைவேற்றாமல் அல்லது கலைஞர்களிடமிருந்து அவர்களுக்கான வருமானங்களை நிறுத்திவைக்கும் செயல்களை செய்யவில்லை. இருப்பினும், நாங்கள் நம்பியிருந்தது போல் சம்பந்தப்பட்ட கலைஞர்களிடையே பாடலுக்கான பங்களிப்பு பற்றி ஒருமித்த கருத்து இல்லை.
அதுதவிர, கலைஞர்களின் ஒப்பந்தக் கடமைகளின்படி, அவர்களின் நேரடி ஈடுபாடுகள் மற்றும் நேரடியாக சேகரிக்கப்பட்ட வருமானம் பற்றி நாங்கள் மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்தாலும் அதற்கான எந்த வெளிப்பாடுகளோ அல்லது அறிக்கைகளோ எங்களுக்கு வழங்கப்படவில்லை. இந்தச் செயற்பாடுகளால் நடைமுறைப் பிரச்சனைகளுக்கான தீர்வு காணும் முயற்சிகள் சிக்கலில் உள்ளது. இருந்தபோதிலும், சம்பந்தப்பட்ட இரு கலைஞர்களுக்கு முன்பணம் வழங்கப்பட்டுள்ளது.
அது தவிர, அவர்கள் சார்பாக கணிசமான செலவுகளையும் மாஜா நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் எதிர்நோக்கும் இந்தச் சிக்கல் நிலை நியாயமாகவும் விரைவாகவும் தீர்க்கப்படுவதன் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டுள்ளோம். சமீபத்திய அவதூறான குற்றச்சாட்டுகளை கருத்தில் கொண்டு, உரிய வழிகளில் அவற்றை நிவர்த்தியும் செய்வோம்” என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எஞ்சாயி எஞ்சாமி பாடலால் ஒரு பைசா கூட வருமானம் இல்லை… சந்தோஷ் நாராயணன் ஓபன் டாக்!