சென்னை: அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்டோர் நடித்து திரையரங்குகளில் வெற்றிநடை போடும் திரைப்படம் ’லப்பர் பந்து’. கடந்த வாரம் (செப்.20) வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து நமது செய்தியாளரிடம் படத்திற்கு கிடைத்த வரவேற்பு குறித்து பேசுகையில், “மிகவும் சந்தோஷமாக உள்ளது. இந்த கதையை முதலில் கேட்டதுமே பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்க ஒப்புக்கொண்டனர். இந்த கதையை எனது வாழ்க்கையில் இருந்து எடுத்ததால் படமாக்குவதற்கு மிகவும் சுலபமாக இருந்தது.
இப்படத்தில் சாதி குறித்து மையக்கருத்தாக கூறாமல் போகிற போக்கில் பேசியுள்ளோம். நாம் படத்தில் சாதியை குறித்து பேசினால் நாம் சாதி வெறியன் கிடையாது. மக்களிடம் இப்படம் வரவேற்பை பெற முக்கிய காரணம் பொழுதுபோக்கு அம்சம் தான். கருத்து மட்டும் சொன்னால் படத்தின் வெற்றிக்கு உதவாது. இதில் பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்ததால் மக்களுக்கு பிடித்திருக்கலாம்” என்றார்.
பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் படங்களுக்கு வைக்கப்படும் எதிர்மறை விமர்சனங்கள் குறித்து கேட்டபோது, “பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் படங்களும் பாராட்டுகளும் பெறுகின்றன. விமர்சனம் எல்லோரும் செய்வார்கள், இத்தனை கோடி மக்களில் அனைவருக்கும் ஒரு படம் பிடிக்காது, அனைவரும் நம்மை பாராட்டமாட்டார்கள். எனக்கும் விமர்சனம் வரத்தான் செய்யும்.
ஆனால் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் ஆகியோர் தான் சாதி அரசியலை சரியாக பேசுகிறார்கள் என எனக்கு தோன்றுகிறது. அவர்களுக்கு சாதி அரசியல் பற்றி நன்றாக தெரிகிறது. நான் சாதி அரசியல் குறித்து பேசுவதற்கு பயப்படுகிறேன். நாம் மாற வேண்டும், அவர்கள் பேசுவதை கேட்க தயாராக இருக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: சென்னையின் முக்கிய சாலைக்கு 'எஸ்.பி.பி சாலை' பெயர் மாற்றம் - தமிழக அரசு அறிவிப்பு - SPB ROAD
புதிதாக கதை எழுதும் இயக்குநர்கள் சாதி அரசியலை மையமாக வைத்து எழுதுவது குறித்து கேட்டதற்கு, இதுகுறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை, அது வதந்தியாக கூட இருக்கலாம். நான் படத்தில் பெண் கதாபாத்திரங்களை ஒழுங்காக எழுத வேண்டும் என்பதற்காக எழுதவில்லை. என் படங்களில் ஹீரோயின்கள் இவ்வாறு இருக்க வேண்டும் என்று எழுதினேன். தினேஷின் கதாபாத்திரம் எங்கள் ஊரில் உள்ள ஒருவரின் குணாதிசயங்களை கொண்டு கொஞ்சம் விரிவுபடுத்தி எழுதினேன்” என்று தெரிவித்துள்ளார்.