சென்னை: நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக செப்.30ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த நிலையில், கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பில் தான் ரஜினிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்திகளுக்கு, அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், "கூலி படப்பிடிப்பு 50% முடிந்து விட்டது. ரஜினி நன்றாக இருக்கிறார். அவரிடம் பேசினேன், அது பற்றி நானே கூறுகிறேன், விசாகப்பட்டினம் படப்பிடிப்பு தொடங்கும் முன் கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு முன்னரே, ரஜினிக்கு 30ஆம் தேதி மருத்துவ சிகிச்சை இருப்பதாகக் கூறினார்.
ரஜினியைத் தவிர பிற மாநில நடிகர்கள் இருப்பதால், சிகிச்சை குறித்து முன் கூட்டியே சொல்லியிருந்தார். அதனால், 28ஆம் தேதிக்குள் ரஜினி நடிக்க வேண்டிய காட்சிகள் படமாக்கப்பட்டது. 29ஆம் தேதி சென்னை திரும்பினார். அதன் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், எப்படி வைரலானது எனத் தெரியவில்லை. ரஜினி உடல்நிலையை மீறி படமா என்றால் கிடையாது. அவரது உடல் நலம் தான் முக்கியம்.
இதையும் படிங்க: வீடு திரும்பிய ரஜினிகாந்த்... வெளியிட்ட அறிக்கை என்ன?
அவருக்கு பாதிப்பு ஏதாவது ஏற்பட்டிருந்தால், படக்குழு முழுவதும் மருத்துவமனையில் தான் இருந்திருப்போம். 5 மணி வரை படப்பிடிப்பு எடுத்துக் கொண்டிருக்க மாட்டோம். ஆனால், அவரைப் பற்றி எழுதியுள்ளதைப் பார்க்கும் போதுதான் வருத்தமாகவும், மன உளைச்சலாகவும் இருந்தது. ரஜினி நன்றாக இருக்கிறார். ஆண்டவன் அருளால் அவருக்கு ஒன்றும் ஆகாது. ஆனால், அவரை பற்றி எழுதுவதைப் பார்க்கும் போது எங்களுக்கு பதட்டமாகிறது.
இந்த வயதிலும் ரசிகர்கள் ரசிக்கும் வகையில் நடிப்பதைக் கொண்டாடுகிறோம். ஏதாவது எழுதி அனைவரையும் பதட்டமடையச் செய்யாதீர்கள். எந்த தகவலாக இருந்தாலும் அதிகாரப்பூர்வமாகச் சொல்லுங்கள். தற்போது மருத்துவ சிகிச்சை ஒய்வு இருப்பதால், மீண்டும் அக்டோபர் 15ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கும்.
விஜயின் அரசியல் குறித்த கேள்விக்கு, நடிகர் விஜய் நெருக்கமானவர். அவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது ஆசை. ஆனால் அவரது நோக்கம் வேறு ஒரு இடத்தில் இருக்கிறது. அதனால் விஜய்க்கு வாழ்த்துக்கள் என்றார்.
அதைத் தொடர்ந்து பேசிய லோகேஷ், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வாழ்த்து பெருமிதமாக இருந்தது. தமிழ் சினிமாவில் அனைத்து வகையான படங்களும் தேவை. அவற்றை வரவேற்க வேண்டும். ஆனால், அதையும் மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்