சென்னை: நடிகரும், துக்ளக் பத்திரிகை ஆசிரியருமான சோ ராமசாமியின் மனைவி சௌந்தரா சோ ராமசாமி (84) காலமானார். தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, பல்வேறு படங்களில் அரசியல் வசனங்கள் பேசி மக்களிடத்தில் கவனம் பெற்றவர் சோ என அழைக்கப்படும் சோ ராமசாமி.
துக்ளக் என்ற பத்திரிகை நடத்தி வந்த சோவுக்கு சௌந்தரா என்ற மனைவியும், ஸ்ரீராம் என்ற மகனும், சிந்துஜா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு சோ ராமசாமி உடல் நலக்குறைவால் காலமானார். இதனைத் தொடர்ந்து, இன்று சோ ராமசாமி மனைவி, சௌந்தரா சோ ராமசாமி வயது மூப்பு காரணமாக இன்று (ஆகஸ்ட் 20) சென்னையில் காலமானார்.
இவரது உடல் நாளை காலை நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சோ மனைவி சௌந்தரா மறைவிற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "புகழ்பெற்ற அரசியல் விமர்சகரும், எனது மரியாதைக்குரியவருமான மறைந்த சோ இராமசாமி அவர்களின் மனைவி சவுந்தரா இராமசாமி காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: என்னுடைய படங்களை மக்கள் கலாய்ப்பது இயல்பு தான் - நடிகர் விஜய் சேதுபதி - Vijay sethupathi