தூத்துக்குடி: டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உல்ளிட்ட பலர் நடிப்பில் ’வேட்டையன்’ திரைப்படம் நேற்று வெளியானது. இந்நிலையில் வேட்டையன் படத்தில் கோவில்பட்டி, காந்தி நகரில் உள்ள அரசு பள்ளி குறித்து தவறாக சித்தரித்து இருப்பதாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இது தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவில்பட்டி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த மக்கள், தங்கள் பகுதியைவும், தங்கள் பகுதியில் சிறப்பாக செயல்பட்டு வரும் அரசு பள்ளியையும் படத்தில் தவறாக சித்தரித்து உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில்பட்டியில் வேட்டையன் திரைப்படம் ஓடும் லட்சுமி திரையரங்கை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேட்டையன் படத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி, அந்தக் காட்சியை நீக்கிவிட்டு திரைப்படத்தை ஒளிபரப்ப வேண்டும், இல்லை என்றால் ஒளிபரப்ப விடமாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டம் நடத்திய காந்தி நகர் மக்களிடம் காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து புகார் அளியுங்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் கூறியதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இதையும் படிங்க: ஆயுத பூஜை ஸ்பெஷல்: காதல் கணவருடன் சிவப்பு புடவையில் ஜொலிக்கும் நயன்தாரா!
திரைப்படத்தை நிறுத்த வலியுறுத்தி பெண்கள், திரையரங்கு நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது திரையரங்க நிர்வாகி ஒருவர் ”நீங்க யாருக்கு ஓட்டு போட்டிங்களோ, அவர்தான் இந்த படத்தை எடுத்து வெளியிட்டு இருக்கிறார்” என்று கோபமாக சொன்னார். நாங்க யாருக்கு வேணாலும் ஓட்டு போடுவோம், எங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியை தவறாக சித்தரிப்பதை நிறுத்துங்கள் என்று பெண்கள் பதில் கூறினர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்