ஹைதராபாத்: கர்நாடகாவைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலாஜி நாயுடு என்பவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் நடிகர் யாஷ் நடிக்கும் டாக்ஸிக் படத்திற்கான செட் அமைக்கும் பணியானது பெங்களூருவின் சுற்றுப்புறத்தில் 20 ஏக்கர் வன நிலத்தில் அனுமதியின்றி கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பகுதியில் படத்தொகுப்பு பணிகளை அனுமதித்த HMT நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கட்டுமானப் பணிகளை நிறுத்த உத்தரவிட வேண்டும்” எனவும் மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.அன்ஜாரியா மற்றும் நீதிபதி கே.வி.அரவிந்த் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின்னர், படத்தின் தயாரிப்பு நிறுவனமான KVN FILM PRODUCTION நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆக.19-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இதுதொடர்பாக ஈடிவி பாரத் ஊடகத்திடம் வழக்கறிஞர் பாலாஜி நாயுடு கூறுகையில், "பீனியா தோட்ட நிலத்தை ஒட்டிய வன நிலம் என குறிப்பிடப்பட்ட 20 ஏக்கர் பரப்பளவில் சட்டவிரோதமாக டாக்ஸிக் படத்திற்கான செட் கட்டப்பட்டுள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளோம். சட்ட அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள இந்த கட்டுமானத்தை அகற்ற வேண்டும் என மனுவில் கூறி உள்ளோம்” என தெரிவித்தார்.
இதுகுறித்து KVN Film Production நிர்வாக தயாரிப்பாளர் சுப்ரீத் கூறுகையில், “HMTக்குச் சொந்தமான நிலத்தில் செட் அமைந்துள்ளது. செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் நாங்கள் இன்னும் படப்பிடிப்பை தொடங்கவில்லை. அதனால் நிலத்தின் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கலாம்” என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: நீ என்ன அவ்ளோ பிஸி ஆகிட்டியா? - அசோக் செல்வனை சாடிய கே.ராஜன்! - K Rajan scolded actor Ashok Selvan