சென்னை: மதுரையை சேர்ந்த பவர்ஸ்டார் சீனிவாசன் மருத்துவராக பணியாற்றி பின்னர் சினிமாவில் நுழைந்தார். தமிழ் சினிமாவில் பவர் ஸ்டார் சீனிவாசன் 'லத்திகா' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து பவர்ஸ்டார் சீனிவாசன் நடித்த 'ஆனந்த தொல்லை' திரைப்படத்தில் நடித்தார். பின்னர் சந்தானம் நடித்த 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரம் மூலம் பிரபலமானார்.
அந்த படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' திரைப்படத்தில் பவர்ஸ்டாரை சந்தானம் கிண்டல் செய்யும் காட்சிகள் திரையரங்குகளில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது. இப்போதும் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தின் காமெடி காட்சிகள் மீம்ஸ்களில் உலா வருகிறது.
தொடர்ந்து பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ள பவர்ஸ்டார் சீனிவாசன், தற்போது 'ஆசையா தோசையா' என்ற திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இதனிடையே பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி சில காலம் படங்களில் நடிக்காமல் இருந்தார். தன் மீது உள்ள விமர்சனங்களைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் சினிமாவில் நடித்து வந்தார்.
இதையும் படிங்க: ”உன் இஷ்டத்துக்கு பேச இது உங்க அப்பன் வீடு இல்லடி”... பிக்பாஸ் வீட்டில் ஜாக்குலினிடம் எகிறிய தர்ஷிகா!
இந்நிலையில் நேற்று மாலை பவர்ஸ்டார் சீனிவாசன் தன்னுடைய பயணத்தின் போது திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடனடியாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுநீரகத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், இதற்காக ஒரு வார காலம் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். மருத்துவர்களின் அறிவுறுத்தலை தொடர்ந்து ஒரு வார காலம் மருத்துவமனையில் தங்கி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.