திண்டுக்கல்: சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் 'இந்தியன் 2'. இந்த படம் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் நீட்சியாக எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் எஸ்.ஜே. சூர்யா, சித்தார்த், காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர், விவேக், மனோ பாலா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
இந்த படம் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியாகி ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்தநிலையில் திண்டுக்கல்லில் உள்ள திரையரங்கில் நகைச்சுவை நடிகர் ரோபோ 'இந்தியன் 2' திரைப்படத்தைப் பொதுமக்களுடன் சேர்ந்து பார்வையிட்டார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில்,"உலகம் முழுவதும் இந்தியன் 2 திரைப்படம், 6 வருட போராட்டத்திற்குப் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக படம் உருவாகியுள்ள இந்த படத்தில் பல்வேறு நபர்களின் கடின உழைப்பு அடங்கியுள்ளது.
28 வருடத்திற்கு முன்பு இந்தியன் திரைப்படம் எவ்வளவு எதிர்பார்ப்புடன் வெளியிடப்பட்டதோ, அதைவிட பல மடங்கு எதிர்பார்ப்புடன் இப்படம் வெளியிடப்பட்டுள்ளது. பாபிசின்ஹா, எஸ்.ஜே. சூர்யா இத்திரைப்படத்தில் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
கமல்ஹாசன் ரசிகர்கள் என சொல்வதை விட பக்தர்கள் என சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். 45 வருடங்களாக கமலின் நடிப்பிற்கு நாங்கள் அடிமைகள், அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.
அவருடைய கோடான கோடி ரசிகர்களில் நானும் ஒருவன். ரசிகர்கள் இந்தியன் 2 படத்தினை கொண்டாடுகின்றனர். படம் மிகவும் நன்றாக வந்துள்ளது. அவரின் அடுத்த திரைப்படமாக 'தக் லைஃப்', 'இந்தியன் 3' பாகம் ஆகியவை வர உள்ளது.
கமல்ஹாசன் ரசிகர்களுக்கு ட்ரீட் மேல ட்ரீட் கொடுத்துக் கொண்டே இருப்பார். அதனை நாங்கள் கொண்டாடிக் கொண்டே இருப்போம். கண்டிப்பாக படத்தின் வசூல் பிரம்மாண்டமாகதான் இருக்கும் அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
சண்டைக் காட்சிகளில் தற்போது வரை எனர்ஜி குறையாமல் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தியன் திரைப்படம் 10 ரூபாய் முதல் லட்சம் வரை நடைபெறும் ஊழலுக்கு எதிரான திரைப்படம். இந்தியன் 2 திரைப்படம் இந்தியா முழுவதும் நடைபெறும் ஊழலுக்கு எதிரான திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் அனிருத் சிறப்பாக இசையமைத்து உள்ளார். அனைத்து பாடல்களும் சிறப்பாக அமைந்துள்ளது." என தெரிவித்தார்.
இதையும் படிங்க: இது கோவை குட்டப்பா.. கொஞ்சம் காத்திருந்தால் சிட்டியாக வருவான்.. பொறியியல் மாணவர்கள் அசத்தல்!