சென்னை: இயக்குநர் எச்.வினோத் சதுரங்க வேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனைத் தொடர்ந்து, கார்த்தி நடிப்பில் அவர் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று படமும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிப் படமாக அமைந்தது.
அதன்பிறகு அஜித்துடன் இணைந்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என மூன்று படங்கள் பணியாற்றினார். ஆனாலும் எச்.வினோத்திற்கு அவரது முந்தைய படங்களைப் போல மிகப் பெரிய வெற்றியை இந்த படங்கள் தரவில்லை. இதனால் எப்படியாவது ஒரு வெற்றிப் படத்தை கொடுத்துவிட வேண்டிய கட்டாயத்தில் இருந்த அவருக்கு, கமல்ஹாசனை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதற்காக கதையை தயார் செய்யும் பணியில் பல மாதங்களாக அவர் ஈடுபட்டு வந்தார்.
கமலின் 233வது படமாக இது இருக்கும் என்ற அறிவிப்பும் வெளியானது. ஆனால், திடீரென மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடிக்க தேதிகள் வழங்கி, கமல்ஹாசன் தற்போது அப்படத்தில் நடித்து வருகிறார். அதேநேரம், எச்.வினோத் - கமல் கூட்டணி படம் குறித்த எந்த வித அப்டேட்டும் வராமல் இருந்தது.
இந்த நிலையில், அந்த படம் தற்காலிகமாக கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. படத்தின் கதை மீதான விவாதம் காரணமாக, இந்த படம் தற்போது கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் நடிகர் விஜயின் கடைசி படத்தை எச்.வினோத் இயக்குகிறார் என்றும் கூறப்பட்டது. ஆனால், அதில் உண்மையில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அடுத்ததாக தனுஷ் நடிக்கும் படத்தை எச்.வினோத் இயக்கும் வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதி என்கின்றனர்.
முழுக்க முழுக்க மத்திய அரசை விமர்சிக்கும் அரசியல் கதை ஒன்றை எச்.வினோத் தயார் செய்துள்ளதாகவும், ஆனால் அதில் நடிக்க முன்னணி நடிகர்கள் தயங்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், தனுஷ் படத்துக்குப் பிறகு, தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் திட்டத்திலும் அவர் உள்ளார்.
இதையும் படிங்க: நடிகர் விஜய்யின் கடைசி படத்தை வெற்றிமாறன் இயக்குவாரா? - ரசிகர்கள் எதிர்பார்ப்பு!