மும்பை: 17வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி நாட்டில் பல்வேறு நகரங்களில் வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரின் 14வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது.
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை அணி, ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களின் பந்துகளை எதிர்கொள்ளா முடியாமல் திணறியது.
இதனால், 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது, மும்பை அணி. அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 34 ரன்கள், திலக் வர்மா 32 ரன்கள் என விளாசினர். ராஜஸ்தான் அணி தரப்பில் ட்ரெண்ட் போல்ட் மற்றும் யுவேந்திர சாஹல் தலா 3 விக்கெட்டுகளையும், நந்த்ரே பர்கர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.
இதனையடுத்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, ரியான் பராக் அதிரடி ஆட்டத்தால், 15.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டியது. 39 பந்துகளை எதிர்கொண்ட பராக் 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் குவித்து இறுதிவரை களத்தில் நின்று அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதன் மூலம், நடப்பு ஐபிஎல் தொடரில் 3 வது வெற்றியை பதிவு செய்து ராஜஸ்தான் ராயல்ஸ் புள்ளிபட்டியலில் முதல் இடம் பிடித்தது.
மும்பை ஹாட்ரிக் தோல்வி: 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு தொடரில் இன்னும் தன்னுடைய வெற்றி கணக்கை தொடங்காமல் உள்ளது. பல தொடர்களில் இதுபோல, ஆரம்பத்தில் கொஞ்சம் சறுக்கல்களை சந்தித்து இறுதியில் கோப்பை வென்ற வரலாறு எல்லாம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு உண்டு.
ஆனால், நடப்பு தொடரில் அது சாத்தியமாகுமா? ரோகித் சர்மாவை கேப்டன்சியில் இருந்து நீக்கிவிட்டு, புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமனம் செய்தது, மும்பை அணி நிர்வாகம். இதற்கு ரோகித் சர்மா ரசிகர்கள் பலரும் கடுமையான எதிர்ப்புகளை சமூக வலைத்தளங்களில் தெரிவித்தனர்.
இந்த நிலையில், மும்பை அணி விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இதுஅவர்களது ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இனிவரும் போட்டிகளிளாவது மும்பை அணியை வெற்றிபாதைக்கு ஹர்திக் பாண்டியா அழைத்து செல்வாரா? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.
இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 15வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்த போட்டியானது தொடங்கப்படவுள்ளது.
இதையும் படிங்க: விசாகப்பட்டினத்தை அதிரவிட்ட வின்டேஜ் தோனி.. டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை!