சென்னை: திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் பேனரில், சி வி குமார் தயாரிப்பில் நடிகர் விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ் உள்ளிட்டவர்கள் நடிப்பில், கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான 'இன்று நேற்று நாளை' திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. டைம் மிஷினை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தையும் பெற்றது.
இந்நிலையில், சுமார் ஒன்பது வருடங்களுக்குப் பிறகு 'இன்று நேற்று நாளை' இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தங்கம் சினிமாஸ் எஸ்.தங்கராஜ் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி வி குமார் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இன்று நேற்று நாளை 2' என்று பெயரிடப்பட்டுள்ளது.
ரவிக்குமார் எழுத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தை பரத் மோகன் இயக்குகிறார். சி வி குமாரிடம் 'மாயவன்' திரைப்படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய இவர், 'இக்லூ' மற்றும் 'இப்படிக்கு காதல்' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
'கஜினிகாந்த்', 'இப்படிக்கு காதல்', 'பொய்க்கால் குதிரை' உள்ளிட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பல்லு, 'இன்று நேற்று நாளை 2' படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர்கள் மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் பரத் மோகன், "ஒரு புதிய கதைக்கருவோடு 2015-ல் வெளியான 'இன்று நேற்று நாளை' மக்களை கவர்ந்து பெரிதும் பேசப்பட்டது. அதன் இரண்டாம் பாகத்தை, அதுவும் அத்திரைப்படத்தை தயாரித்த சி வி குமார் தயாரிப்பிலும், இயக்குநர் ரவிக்குமார் எழுத்திலும் இயக்குவது பெரும் மகிழ்ச்சி. காலப்பயண கதையான 'இன்று நேற்று நாளை 2' திரைப்படமும் ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடிக்கும்" என்று கூறினார். மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது.