சென்னை: தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநராக வலம் வருபவர், இயக்குநர் ஷங்கர். தற்போது கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். கமலுடன் காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா, மறைந்த நடிகர்கள் விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு முதன்முறையாக ஷங்கருடன் இணைந்து அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தியன் 2 திரைப்படத்தின் நீளம் கருதி, இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என இரண்டு பாகங்களாக தயாராகி வருவதாக தகவல் வெளியாகியது. மேலும், இந்தியன் 2 படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட கிராஃபிக்ஸ் பணிகள் நிறைவடைந்த நிலையில், இறுதிகட்ட நேரத்தில் எடுக்கப்பட்ட புதிய காட்சிகளுக்கான ஃகிராபிக்ஸ் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
மேலும், இப்படம் கோடையில் திரைக்கு வர தயாராகி வரும் நிலையில், படத்தின் மீதமுள்ள ஒரு பாடல் காட்சியை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக, சென்னை திருவொற்றியூரில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதிகளில், சமீபத்தில் இப்பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது. தற்போது, அதே பாடல் காட்சிக்காக சென்னை பட்டினம்பாக்கம் லூப் ரோட்டில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இதில் சித்தார்த், பிரியா பவானி சங்கர், ஜெகன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இதற்காக, லூப் சாலையில் உள்ள குடிசை மாற்று வாரிய வீட்டுச் சுவர்களில் இந்தியன் தாத்தா ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. இதனால், அங்கு வரும் ஏராளமான ரசிகர்கள் படப்படிப்பை பார்த்து செல்வதுடன், வரையப்பட்ட ஓவியத்துடன் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.
இதையும் படிங்க: என்னால் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியவில்லை.. நடிகர் கார்த்தி