சென்னை: தமிழ் சினிமாவில் எவ்வளவோ பாடகர்கள் இருக்கலாம். ஆனால் அரை நூற்றாண்டுக்கு மேலாக தன் காந்த குரலால் மக்கள் மனதை வென்றவர் 'பாடும் நிலா' எஸ்பி பாலசுப்பிரமணியம். கரோனாவால் உயிரிழந்த காவியத் தலைவனின் நான்காம் ஆண்டு நினைவு தினம் இன்று. ஆந்திர மாநிலத்தின் நெல்லூரில் பிறந்து வளர்ந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம், பின்னணி பாடகி ஜானகியால் கண்டறியப்பட்டு, சினிமாவில் பாடகராக வாய்ப்பு தேட ஆரம்பித்தார்.
எஸ்.பி.பியின் ஆரம்ப காலகட்டம்: 1966ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி 'ஸ்ரீஸ்ரீஸ்ரீ மரியாதை ராமண்ணா' என்ற தெலுங்கு படத்தில் பாடகராக அறிமுகமானார். தமிழில் முதல் முறையாக எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாட வாய்ப்பு கிடைத்த நிலையில், அவரது தமிழ் உச்சரிப்பு சரியாக இல்லாததால் அந்த வாய்ப்பை இழந்தார். அதன் பிறகு எம்.எஸ்.விஸ்வநாதனிடம் தீவிரமாக தமிழ் கற்றுக்கொண்டு தமிழில் உச்சத்தை தொட்டார். எந்த தமிழ் உச்சரிப்பு சரியில்லை என்று சொன்னார்களோ அதே தமிழ் மொழியில் ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடினார்.
எம்ஜிஆர் தொடங்கி தற்போது உள்ள இளம் நடிகர்கள் வரை அனைவரது படங்களிலும் பாடல் பாடிய வித்தகன் எஸ்.பி.பாலசுப்ரமணியம். தான் அறிமுகமான காலகட்டத்தில் தமிழில் டி.எம்.சௌந்தரராஜன், பி.பி.ஸ்ரீநிவாஸ் போன்றோர் கோலோச்சிக் கொண்டிருந்தனர். அவர்களின் பாரம்பரிய இசையில் பாடிய பாடல்களுக்கு மத்தியில் எஸ்.பி.பி என்ற இளங்குரல் ஒன்று துள்ளலுடன் அறிமுகமாகிறது. பாடகர்களுக்கு நல்ல குரல் வளம் அமைவது வரம். அத்தகைய வரத்தை பிறவியிலேயே பெற்றவர் எஸ்.பி.பி.
எஸ்.பி.பி பாடல்கள்: காதல், ஏக்கம், சோகம், அன்பு, நகைச்சுவை என அத்தனை பரிமாணங்களும் இவரது குரலில் இனிமையாக வந்திறங்கும். தம்பிக்கு எந்த ஊரு படத்தில் 'காதலின் தீபம் ஒன்றில்' பாடலில் ஆரம்ப ஹம்மிங் குரல் மூலமே நம்மையும் காதலிக்க வைத்துவிடுவார். தளபதி படத்தில் 'பாசம் வைக்க, நேசம் வைக்க, தோழன் உண்டு வாழ வைக்க' என எஸ்.பி.பி பாடும் போது நம்மையே அறியாமல் இவரை தோழனாக ஏற்றுக்கொள்வோம்.
இன்றும் ரஜினிக்கு அறிமுகப் பாடல் என்றால் நினைவுக்கு வருவது எஸ்பிபி யின் குரல் தான். ஒருவன் ஒருவன் முதலாளி, அதான்டா இதான்டா, வந்தேன்டா பால்காரன், தர்பார் என பட்டியல் நீள்கிறது. மறுபக்கம் கமலுக்கு தெலுங்கில் அநேக படங்களுக்கு பின்னணி குரல் கொடுத்தவர் எஸ்.பி.பி தான்.
பாடல்களில் நவரசம்: நவரசங்களையும் தன் குரல் வழியே வெளிப்படுத்த முடியும் என்பதை எஸ்.பி.பி நிகழ்த்திக் காட்டினார். காதல் ரசம் சொட்டும் பாடல்கள் ஒரு புறம் என்றால், பாடல்களில் தன் அசாத்திய குறும்புத்தனத்தின் மூலம் நம்மை சிரிக்க வைக்கும் வல்லமை பெற்றவர். சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் பாடலில் அவர் பாடி முடிப்பதற்குள் நமக்கு மூச்சு முட்டும். அத்தனை ஆக்ரோஷத்தையும் ஆத்திரத்தையும் அமர்க்களமாகப் பிரதிபலித்திருப்பார். பாடலின் இடையே அவர் உறுமும் சத்தம் சிங்கத்தின் கர்ஜனை போல் இருக்கும்.
மேலும் பாடல்களுக்கு நடுவே சிரித்தும், அழுதும், ரொமான்ஸ் செய்தும் கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி, ரசிகர்களிடம் அதே உணர்வுகளைக் கடத்திச் செல்லும் வல்லமை பெற்றவர். இதே குரல் தான் சங்கராபரணத்திலும், சகலகலா வல்லவனிலும் பாடியது. 'ஹாப்பி நியூ இயர்' என எஸ்.பி.பி குரலில் தான் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தொடங்குகிறது.
எஸ்.பி.பி சாதனைகள்: எஸ்.பி.பி சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம். 16 மொழிகளில் 42,000 பாடல்கள். 45 படங்களுக்கு இசையமைப்பு. பல நூறு படங்களுக்கு கதாநாயகனுக்கு பின்னணி குரல். அது மட்டுமில்லாமல் 73 திரைப் படங்களில் நடித்துள்ளார். நான்கு மொழிகளில் ஆறு தேசிய விருதுகள், பல்வேறு மாநில அரசின் எண்ணற்ற விருதுகள் என அனைத்து விருதுகளும் தன்னை பெருமைப் படுத்திக் கொண்டன. உலகம் முழுவதும் இசை கச்சேரிகள் நடித்தியுள்ளார். ரெக்கார்டிங் போது பத்து நிமிடத்தில் பாடல் பாடி முடித்துவிடுவார்.
இதையும் படிங்க: மீண்டும் கார் பந்தயத்திற்கு திரும்பிய நடிகர் அஜித்! - Ajith Kumar participate in car race
உலக அளவில் பேசப்பட்ட காந்தி திரைப்படத்தில், காந்தியாக நடித்த பென்கிங்ஸ்லிக்கு பின்னணி குரல் கொடுத்தவர் எஸ்பிபி. இதனை தனது வாழ்நாள் பெருமையாக கருதினார். தாத்தா தொடங்கி கொள்ளுப் பேரன் வரை பல மொழிகளிலும் சேர்த்து நான்கு தலைமுறை நடிகர்களுக்கு எஸ்பிபி பாடல்கள் பாடியுள்ளார். என்றென்றும் எஸ்.பி.பி பாடல்களை தினசரி வாழ்க்கையில் ஒரு முறையாவது கேட்காமல் கடப்பது கடினம். பாடும் வானம்பாடி எஸ்பிபி நினைவுகளை போற்றுவோம்.