சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68ம் ஆண்டு பேரவைக் கூட்டம் இன்று (செப்.9) சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறுகிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், நிகழ்ச்சியில் நடிகர் டெல்லி கணேஷ், சி.ஆர். விஜயகுமாரி இருவருக்கும் கலையுலக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அத்துடன் நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் அவர் முகம் பொறிக்கப்பட்ட தங்க டாலரும் வழங்கப்பட்டது. தமிழ்த் திரை உலகில் நலிந்த நடிகர்கள் மற்றும் அகதிகள் முகாம்களில் இருப்பவர்களுக்கு திண்டுக்கல்லில் 5 ஏக்கர் தனது சொந்த இடத்தை கொடுப்பதாக நடிகர் கருணாஸ் அறிவித்தார்.
நடிகர் சங்கத் தலைவராக நடிகர் சரத்குமார் பொறுப்பேற்ற பிறகு எங்களை போன்ற நடிகைகளை புறக்கணித்தார். ஆனால், இன்றைக்கு இருக்கும் நாசர் தலைமையிலான சங்கம் தான் தற்போது எங்களை அரவணைத்து வருகிறது என்று பழம்பெரும் நடிகை விஜயகுமாரி நடிகர் சரத்குமார் மீது குற்றச்சாட்டு வைத்தார். அதைத் தொடர்ந்து, விஜயகாந்த் இறுதி சடங்குகளை சிறப்பாக செய்து முடித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் நடிகர் சங்க பொதுக்கூட்டத்தில் முக்கிய 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முக்கிய தீர்மானங்கள்:
- தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இன்று வரை நடைபெற்ற அனைத்து கூட்டங்களிலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றம்.
- 20-3-25-ல் நடிகர் சங்கம் நிர்வாகிகள் பதவிக்காலம் முடிவடைவதால் தேர்தல் பணிகளை தொடர்ந்தால் சங்க கட்டடம் கட்டும் பணிகளை பாதிக்கும் என்பதால், மேலும் 3 ஆண்டுகளுக்கு நிர்வாகிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- நடிகர் சங்கம் மற்றும் நடிகர் சங்க அறக்கட்டளை சார்ந்த வழக்குகள் சம்பந்தமாக முடிவெடுக்கவும், சங்க வளர்ச்சிக்காக தேவையான அனைத்து நடவடிக்கை தொடங்கவும் அதிகாரம் வழங்குவதாக தீர்மானம் நிறைவேற்றம்.
- உறுப்பினர்கள் ஆண்டுதோறும் சந்தா கட்ட வேண்டும், தாமதமானால் அவர்கள் சங்க உறுப்பினர் பதவி இழப்பார்கள் என்றும் தீர்மானம்.
- தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான சங்க சட்ட ஆலோசகராக கிருஷ்ணா ரவீந்திரனை நியமிக்க பொதுக்குழு ஒப்புதல் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையும் படிங்க: "கடனை அடைக்க கலை நிகழ்ச்சி.. அதில் ரஜினி, கமல்"- நடிகர் கார்த்தி சொல்வது உண்மையா?