சென்னை: ஐஎம்டிபி தளம் சர்வதேச அளவில் வெளியாகும் படங்களை தர மதிப்பீடு செய்யும் நிறுவனம் ஆகும். சினிமா பற்றிய அனைத்து தரவுகளையும் தரும் தளமாக இது பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளில் உலக அளவில் அதிகம் பேசப்பட்ட டாப் 100 இந்திய நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் முதல் பத்து இடங்களில் எந்த தமிழ் சினிமா பிரபலங்களும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி, முதல் இடத்தில் தீபிகா படுகோனே உள்ளார். ஷாருக்கான் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகிய இருவரும் முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.
அமீர் கான் ஆறாவது இடமும், மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ஏழாவது இடமும் பிடித்துள்ளனர். மேலும், தென்னிந்திய சினிமாவில் பிரபலமான சமந்தா 13வது இடமும், தமன்னா 16வது இடமும் மற்றும் நயன்தாரா 18வது இடமும் பிடித்துள்ளனர். தொடர்ந்து, தெலுங்கு நடிகர் பிரபாஸ் 29வது இடத்தில் உள்ளார்.
தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகியோரை பின்னுக்குத் தள்ளிய நடிகர் தனுஷ் 30வது இடத்தை பிடித்துள்ளார், ராம் சரண் 31வது இடமும், நடிகர் விஜய் 34வது இடத்திலும் உள்ளனர். ரஜினிகாந்த் 42வது இடத்திலும், தற்போது பாலிவுட்டில் கலக்கி வரும் விஜய் சேதுபதி 43வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
அல்லு அர்ஜுன் மற்றும் மலையாள நடிகர் மோகன் லால் முறையே 47 மற்றும் 48வது இடத்தில் உள்ளனர். மாதவன் 50வது இடத்தில் உள்ளார். நடிகை ஸ்ரேயா 53வது இடத்திலும், கமல்ஹாசன் 54வது இடத்திலும் உள்ளனர். நடிகர் சூர்யா 62, மகேஷ் பாபு 72வது இடத்தை பிடித்துள்ளனர்.
மேலும், பகத் பாசில் 81, கேஜிஎஃப் பட புகழ் யாஷ் 89, விக்ரம் 92, அஜித்குமார் 98 மற்றும் பிரித்விராஜ் 100 ஆகிய இடங்களைப் பிடித்துள்ளனர். அதேநேரம், ராஷ்மிகா மந்தனா 78, த்ரிஷா 84, அனுஷ்கா 86வது இடத்தில் உள்ளனர். மேலும், கடந்த 2014 ஜனவரி முதல் இந்தாண்டு ஏப்ரல் மாதம் வரை இந்த பட்டியல் கணக்கெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வெற்றிமாறன், பா.ரஞ்சித், மாரிசெல்வராஜ் குறித்த சர்ச்சை பேச்சு.. சத்யராஜின் பதில் என்ன?