சென்னை: இயக்குநர் செல்வம் மாதப்பன் இயக்கத்தில், நடிகை யாஷிகா ஆனந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் 'படிக்காத பக்கங்கள்' (Padikkaatha Pakkangal) படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து, இசை குறித்து மேடையில் பேசியது விவாதத்திற்குள்ளாகியுள்ளது.
இந்நிகழ்ச்சி மேடையில் பேசிய வைரமுத்து, “இசை பெரியதா? பாடல் வரிகள் பெரியதா? என்கிற பிரச்சனை தற்போது சினிமாவில் எழுந்துள்ளது. இசையும் பாடல் வரிகளும் இணைந்திருந்தால் நல்ல பாடல் உருவாகும். ஆனால், சில சமயங்களில் இசையை விட மொழி சிறந்ததாகத் திகழும் சந்தர்ப்பங்கள் உண்டு, இதைப் புரிந்துகொண்டவன் ஞானி, புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி” எனப் பேசியிருந்தார்.
இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசியிருப்பது, இசைஞானி இளையராஜாவை வைரமுத்து மறைமுகமாக விமர்சித்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் பேசுபொருளானது. இந்நிலையில், வைரமுத்துவின் இந்த பேச்சைக் இசையமைப்பாளர் கங்கை அமரன் விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
-
#எச்சிரிக்கை
— வன்னி அரசு (@VanniKural) April 30, 2024
கடந்த இரு நாட்களுக்கு
முன் நடைப்பெற்ற #படிக்காத_பக்கங்கள் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கவிப்பேரரசு @Vairamuthu அவர்கள் ஆற்றிய உரை இது.
இந்த உரையில்
இசை ஞானி இளையராஜா அவர்கள் குறித்து எங்கும் தவறாகவோ அவதூறாகவோ பேசவில்லை.
ஆனால்,இந்த உரையின் உள்ளடக்கத்தை… pic.twitter.com/t9dXPIrIKB
அதில், "எங்களால் மேலே வந்தவர், வந்த இடத்தையே காலில் போட்டு மிதிப்பது போலப் பேட்டி கொடுப்பதா? மனிதனுக்கு நன்றி வேண்டும். அவரது பாடலுக்கு அதிகமான புகழ் வந்ததால் கர்வம் தலைக்கேறி விட்டது, அடக்கி வைக்க ஆள் இல்லாததால் துள்ளிக் கொண்டிருக்கிறார். வைரமுத்துவை வாழவைத்த இளையராஜாவின் போட்டோ வைத்து தினம் வணங்க வேண்டும். அவர் இல்லையென்றால், வைரமுத்துவின் பெயரே இருந்திருக்காது" எனக் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் கவிஞர் வைரமுத்துவிற்கு ஆதரவாகவும், கங்கை அமரன் பேச்சிற்கு பதிலடி தரும் விதமாகவும் விசிக பொதுச் செயலாளர் வன்னி அரசு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த இரு நாட்களுக்கு முன் நடைப்பெற்ற படிக்காத பக்கங்கள் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கவிப்பேரரசு அவர்கள் ஆற்றிய உரையில் இசைஞானி இளையராஜா அவர்கள் குறித்து எங்கும் தவறாகவோ அவதூறாகவோ பேசவில்லை.
ஆனால், இந்த உரையின் உள்ளடக்கத்தை முழுமையாக கேட்காமல் கங்கை அமரன் அரைவேக்காட்டுத்தனமாக எதிர்வினை ஆற்றியுள்ளார். மெட்டுக்கு பாட்டா? பாட்டுக்கு மெட்டா? மொழியா? இசையா? என்கிற விவாதம் நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது.
கங்கை அமரன் கூட சிறந்த பாடலாசிரியர் தான். அவர் பாடல் எழுதும் போது ஆதிக்கமில்லாத இசை இருக்க வேண்டும் என்பதையே விரும்புவார். ஆனால், இதை புரிந்து கொள்ளாமல் வைரமுத்துவை இழிவுபடுத்தும் விதமாக பேசுவது வருத்தமளிக்கிறது.
கங்கை அமரன் தனக்கு பின்னால் சனாதனக்கும்பல் இருக்கும் திமிரில் இப்படி பேசுகிறார் என்றே புரிந்து கொள்ள முடிகிறது. வைரமுத்து எப்போதும் சனாதனிகளுக்கு எதிராக அரசியல் செய்து வருபவர். அதானால் தான் சனாதனிகள், கங்கை அமரன் அவர்களை தூண்டிவிட்டு இந்த இழிவு அரசியலை செய்து வருகிறனர். இந்த இழிவான அரசியலை இளையராஜா விரும்ப மாட்டார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: "கோயில்களுக்கு போக வேண்டாம்; சினிமாவுக்கு செல்லுங்கள்" - இயக்குநர் மிஷ்கின்!