சென்னை: நடிகர் சிவக்குமார் தனது 'ஸ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளை' மூலம் 45 ஆண்டுகளாக ஆதரவற்ற மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளின் படிப்புக்கு உதவி செய்து வருகிறார். அவருடன் இணைந்து சூர்யாவின் 'அகரம் அறக்கட்டளையும்' இந்த உதவிகளை செய்து வருகிறது.
இந்நிலையில், அந்த அறக்கட்டளைகளின் 45வது ஆண்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 25 மாணவ மாணவிகள் மற்றும் மணிப்பூரைச் சேர்ந்த ஒரு மாணவி என மொத்தம் 26 பேருக்கு தலா ரூ. 10,000/- ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
இதில் பார்வை மாற்றுத்திறனாளிகள் மற்றும் புலம்பெயர்ந்து வந்து மறுவாழ்வு முகாமில் இருப்பவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டது. மேலும் மூத்த ஓவியக் கலைஞர் மாயா (G.R மகாதேவன்) அவர்களின் பணிகளை பாராட்டி அவருக்கு ரூ. 1,00,000/- வழங்கப்பட்டது.
பின்தங்கிய சமூக மாணவர்களுக்கு இலவச கல்வியை வழங்கி வரும் திண்டிவனம் தாய் தமிழ் பள்ளிக்கு ரூ. 1,00,000/- வழங்கப்பட்டது. தொடர்ந்து பின்தங்கிய கிராமங்களில் சிறப்பாகப் பணியாற்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தனர்.
நிகழ்வில் திரைக்கலைஞர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி மற்றும் பேராசிரியர் கல்விமணி ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கினார்கள்.
இதனையடுத்து நடிகர் சூர்யா மேடையில் பேசியதாவது, "எனக்கு தற்போது 49 வயதாகிறது இந்த வயதில் நான் செய்த சாதனைகளை விட 17, 18 வயதில் நீங்கள் செய்துள்ள சாதனை மிகப்பெரியது. எந்த ஒரு வசதியும் இல்லாமல் எதிர்நீச்சல் போட்டு வந்துள்ளீர்கள்.
கல்வி ஒரு ஆயுதம்: அகரம் தற்போது வரை 6000 மாணவ, மாணவிகளின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. அகரம் மூலம் படிக்கும் மாணவர்கள் சிறந்தவர்களாக இருப்பதால், நாங்களும் எவ்வித கூச்சமும் இல்லாமல் எல்லா இடங்களிலும் உதவி கேட்க முடிகிறது.
பள்ளி, கல்லூரி இரண்டிலும் நான் எதுவுமே சாதித்தது கிடையாது. பள்ளி மேலாண்மைக் குழு அழகான மாற்றங்களை கொண்டு வந்து கொண்டிருக்கிறது. கல்வி ஒரு ஆயுதம். கல்வி ஒரு கேடயம், அதனை சரியாக கற்றுக் கொள்ளுங்கள்" என்று நடிகர் சூர்யா அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து பேராசிரியர் கல்யாணி பேசியதாவது, "மனிதர்களை உருவாக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் அகரம் செயல்பட்டு வருகிறது. 2001-2002 கல்வியாண்டில் தமிழக அரசின் தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் சராசரியாக 128 மாணவர்கள் படித்தனர். ஆனால் தற்போது அது பாதியாகக் குறைந்துள்ளது" என்று அவர் வேதனை தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: 'கல்வியும் ஒழுக்கமும் தான் இமயத்தில் ஏற்றும்' - மாணவர்களுக்கு நடிகர் சிவக்குமார் அட்வைஸ்!