சென்னை: மலையாள திரைத்துறையில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக கேரள அரசு வெளியிட்ட ஹேமா கமிட்டி அறிக்கை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பிரபல மலையாள நடிகர்கள் ஜெயசூர்யா, சித்திக், பாபுராஜ் உள்ளிட்ட பலர் மீதும் மலையாள நடிகைகள் பாலியல் புகார் அளித்துள்ளனர்.
இதன் விளைவாக, மலையாள நடிகர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழுவினர் மற்றும் நடிகர்கள் உட்பட 17 பேர் ராஜினாமா செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. திரைத்துறையில் இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து நடிகைகள் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
குறிப்பாக, ஹேமா கமிட்டியைப் போல் தமிழகத்திலும் ஒரு கமிட்டியை அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் விமான நிலையத்தில் இருந்து தனது வீட்டிற்கு வரும் வழியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் ஹேமா கமிட்டி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, “ஹேமா கமிட்டி பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றார். மேலும், சென்னையில் நடைபெற்று வரும் ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், கூலி படத்தின் படப்பிடிப்பு நன்றாக நடந்து வருவதாகவும் தெரிவித்தார். சூர்யாவின் அன்புக்கும் பாசத்திற்கும் ரொம்ப நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், அவர் படமும் வெற்றிபெற வாழ்த்துகள்" என தெரிவித்தார்.
சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படமும், ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படமும் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று கோவையில் நடந்த கார்த்தி நடித்த மெய்யழகன் பட விழாவில், கங்குவா படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று சூர்யா தெரிவித்திருந்தார். இதனால் கூலி திரைப்படமும், கங்குவாவும் ஒரே நாளில் வெளியாகுமா என்பது இன்னும் ஒரு சில தினங்களில் அதிகாரப்பூர்வமாக தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஹேமா கமிட்டி அறிக்கை; ஆவேசமடைந்த ஜீவா.. பிரஸ் மீட்டில் நடந்தது என்ன?