சென்னை: தமிழ் சினிமாவில் உள்ள இயக்குநர்களில் முக்கியமான இயக்குநராக அறியப்படுபவர் பா.ரஞ்சித். இவர் தனது நீலம் புரொடக்சன் தயாரிப்பு நிறுவனம் மூலம் சமூக நீதி பேசும் படங்களைத் தயாரித்து வருகிறார். அந்த வகையில், தற்போது நடிகர் விக்ரம், மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் தங்கலான் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இப்படம் கேஜிஎப் பகுதியில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கை பற்றியதாக உருவாகி வருகிறது என்று கூறப்படுகிறது. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளில் உருவாகி வருகிறது. சமீபத்தில் தங்கலான் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என்று இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜி.வி.பிரகாஷ், "லக்கி பாஸ்கர், தங்கலான் படத்தின் முதல் பாடல் பணிகள் முடித்து தயாரிப்பாளரிடம் கொடுத்துவிட்டதாகவும், விரைவில் பாடல் வெளியாகும், விரைவில் சந்திப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் அவரது அடுத்தடுத்த படங்களின் அப்டேட் குறித்து கேட்டனர். அதற்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் பதில் அளித்துள்ளார். அதில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படத்தின் அப்டேட் கேட்ட ரசிகருக்கு, முதல் பாடல் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. தயாரிப்பாளரின் ஒப்புதலுக்கு காத்திருப்பதாக தெரிவித்தார்.
மேலும், தனுஷின் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் பாடல் குறித்த அப்டேட் கேட்டதற்கு, படத்தில் உள்ள நான்கு பாடல்கள் குறித்து தாம் மிகவும் ஆர்வத்துடன் இருப்பதாகவும், இந்த பாடல்கள் அனைத்தும் இளைஞர்கள் மற்றும் கல்லூரியில் படிப்பவர்களுக்காக இருக்கும் என்றும் பதில் அளித்துள்ளார்.
அதேபோல், கிங்ஸ்டன் படத்தின் அப்டேட் கேட்டதற்கு, போஸ்ட் புரொடக்சன் மற்றும் சிஜி பணிகள் நடந்து வருகிறது. திரை ரசிகர்களுக்கு கேம் சேஞ்சிங் படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். சர்ஃபிரா படத்தின் அப்பேட் கேட்டதற்கு, சர்ஃபிரா படத்தின் பாடல்களும் முடிந்து தயாரிப்பாளரிடம் கொடுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஒத்த ஓட்டு முத்தையா படத்தின் புதிய அப்டேட்! - Otha Ottu Muthaiya first look poster released