சென்னை: இயக்குநர் பாலா தமிழ் சினிமாவில் இயக்குநராக 25 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு பாராட்டு விழா நடைபெறவுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் பாலா. பாலா இயக்கத்தில் விக்ரம் நடித்த ’சேது’ திரைப்படம் தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்றது. பாலா இயக்கத்தில் முதல் படமான சேது (1999), விக்ரம் திரை வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்திய படமாக அமைந்தது.
சேது படத்தில் விக்ரமின் நடிப்பு பெரும் பாராட்டை பெற்றது. விக்ரம் என்னும் நடிகரின் முழுத் திறமையை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டிய படமாக சேது அமைந்தது. அப்படத்தின் கிளைமாக்ஸ் ரசிகர்களை உலுக்கியது. இதனைத்தொடர்ந்து சூர்யா நடித்த நந்தா(2001), திரைப்படத்தை பாலா இயக்கினார். நந்தா திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது. பின்னர் விக்ரம், சூர்யாவை வைத்து பாலா இயக்கிய பிதாமகன் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
09-12-2024
— sureshkamatchi (@sureshkamatchi) December 9, 2024
சென்னை
*இயக்குநர் பாலாவின் இருபத்தைந்தாம் ஆண்டு கலைப்பயணம் மற்றும் ‘வணங்கான்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா*
வணக்கம்!
கலையுலகம் உறவுகளாலும் உணர்ச்சிகளாலும் நிரம்பிய உலகம் மட்டுமல்ல, மகத்தான திறமையாளர்களை உறவுகளாக இணைத்துக் கொண்டு… pic.twitter.com/Ud1IObSon6
இப்படம் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக பாலா உருவெடுத்தார். அதற்கு பிறகு சில ஆண்டுகள் திரைப்படங்கள் இயக்காமல் இருந்த பாலா, 2009ஆம் ஆண்டு ஆர்யாவை வைத்து நான் கடவுள் படத்தை இயக்கினார். இப்படத்தில் அகோரியாக ஆர்யா மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். பின்னர் பாலா இயக்கிய அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார் ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது.
உணர்ச்சிகரமான கதைகளை மிகவும் ரியலிஸ்டாக எடுப்பதில் பெயர் பெற்றவர் இயக்குநர் பாலா. தற்போது சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் அருண் விஜய் நடிப்பில் ‘வணங்கான்’ படத்தை பாலா இயக்கியுள்ளார். வணங்கான் திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில், வரும் டிசம்பர் 18ஆம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது.
இதையும் படிங்க: 'தி கேர்ள் பிரெண்ட்' டீசர்... ராஷ்மிகா மீதான காதலை விவரிக்கும் விஜய் தேவரகொண்டா!
அன்று இயக்குநர் பாலா திரைத்துறையில் இயக்குநராக அறிமுகமாகி 25ஆவது ஆண்டை கொண்டாடும் வகையில் சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டரில் பாராட்டு விழா நடத்தப்படுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். மேலும் இயக்குநர் பாலாவை தமிழ் திரையுலகின் அனைத்து நண்பர்களும் திரண்டு வந்து வாழ்த்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.