சென்னை: சென்னையில் நடைபெற்ற சர்தார் 2 (Sardaar 2 Shooting) படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் சண்டைப் பயிற்சியாளர் ஏழுமலை உயிரிழந்த சம்பவம் 'சர்தார் 2' படக்குழுவினர் மற்றும் தமிழ் திரைத்துறை கலைஞர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது, பெப்சி யூனியனில் இணைக்கப்பட்ட முக்கிய 5 சங்கத்தினருக்குப் படப்பிடிப்பு தளத்தில் கொடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட உள்ளதாக பெப்சி யூனியன் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பெப்சி யூனியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திரைப்பட படப்பிடிப்பு தளத்தில் பெப்சி யூனியன் சங்க உறுப்பினர்களுக்கான தகுந்த பாதுகாப்பு கருவிகள் படப்பிடிப்பு நிலையங்களில் இருக்க வேண்டும். ஆம்புலன்ஸூடன் கூடிய மருத்துவ வசதிகள் அளிக்கப்பட வேண்டும் என்பதைப் பலமுறை தயாரிப்பு சங்கத்திடமும், தயாரிப்பு நிறுவனங்களுக்கும் பெப்சி யூனியன் வேண்டுகோள் வைத்துள்ளது.
ஆனால் ஒரு சில தயாரிப்பு நிறுவனங்களைத் தவிர பெரும்பாலான தயாரிப்பு நிறுவனங்கள் இதை பின்பற்றுவதில்லை. இந்த நிலையில் பெப்சி யூனியனில் இணைக்கப்பட்ட சங்க உறுப்பினர்களுக்கு, இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வரும் ஜூலை 25ஆம் தேதி சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் விழிப்புணர்வு கூட்டம் ஒன்றை நடத்த பெப்சி யூனியன் திட்டமிட்டுள்ளது.
இந்த கூட்டத்தில், திரைப்பட மற்றும் தொலைக்காட்சி வெளிப்புற லைட்மேன் சங்கம், சவுத் இந்தியா சினி மற்றும் டிவி அவுட்டோர் யூனிட் டெக்னீசியன் யூனியன், தென்னிந்தியத் திரைப்பட மற்றும் டிவி சண்டை இயக்குநர்கள் சண்டை கலைஞர்கள் சங்கத்தின் உறுப்பினர், தமிழ்நாடு திரைப்படம் தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குநர்கள் சங்கம், செட்டிங் ஒர்க்கர்ஸ் யூனியன் ஆகிய 5 சங்கங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்.
மேலும், இந்த கூட்டத்திற்காக அன்றைய தினம் சென்னையில் நடைபெறும் சின்னத்திரை மற்றும் பெரியத்திரை சார்ந்த படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படும்" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்