கோயம்புத்தூர்: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள 'இந்தியன் 2' இன்று (வெள்ளிக்கிழமை) உலகம் முழுவதும் வெளியானது. அந்த வகையில், கோவையில் சுமார் 30க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் வெளியாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் வெளியாகியுள்ள நிலையில், கமல்ஹாசனின் ரசிகர்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், படத்தின் வெளியீட்டை ஒட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கமல்ஹாசனின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில், கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பிரபல திரையரங்கில் மக்கள் நீதி மய்யம் மற்றும் கமல் ரசிகர்கள் சார்பில் படம் பார்க்க வந்தவர்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
'இந்தியன் 2' குறித்து படம் பார்த்த ரசிகர்கள் கூறுகையில், "இந்தியன் 2 படம் விக்ரம் படத்தை போல பத்து மடங்கு உள்ளது. யூடியூப்பில் சிலர் கூறும் விமர்சனம் போன்று படம் இல்லை. கமல் புதுப்புது வேடங்களில் நடித்துள்ளார். எதிர்பார்க்காத அளவிற்கு படம் பிரமாண்டமாக உள்ளது. சில காட்சிகள் கண்கலங்க வைக்கின்றன. குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்.
இன்றைய தலைமுறைக்கு தேவையான கதைக்களத்தைக் கொண்டுள்ள படம். இனி எப்படி இருக்க வேண்டும் என்பதை படத்தில் காட்டியுள்ளனர். கமல்ஹாசனுக்காகவே படத்தை மீண்டும் பார்க்க ஆசைப்படுகிறோம். இந்தியன் 3 படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்" எனக் கூறினார்.
கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் 2ஆம் பாகமாக இப்படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கியுள்ளார். படத்தில் கமல்ஹாசன் மீண்டும் ஊழலுக்கு எதிராக போராடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக ரசிகர்கள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, விவேக், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி உள்ளிட்டவர்களும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
முன்னதாக, வர்மக்கலை முத்திரையை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வர்மக்கலை தலைமை ஆசான் ராஜேந்திரன் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு படத்தை வெளியிட தடையில்லை என அறிவிக்கப்பட்டது. படத்தின் தொடக்கத்தில் இருந்தே பல்வேறு பிரச்னைகளை தாண்டி 'இந்தியன் 2' படம் வெளியாகியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: 68வது பிலிம்பேர் விருதுகள்; விருதுகளை அள்ளிச் சென்ற பொன்னியின் செல்வன் 1, திருச்சிற்றம்பலம்!